இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி அவசியமாயின் ஏற்றப்படும் - டெல்டா தொற்று சமூக பரவல் எனும் நிலைப்பாட்டிற்கு இன்னும் வரவில்லை : வைத்தியர் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி அவசியமாயின் ஏற்றப்படும் - டெல்டா தொற்று சமூக பரவல் எனும் நிலைப்பாட்டிற்கு இன்னும் வரவில்லை : வைத்தியர் ஹேமந்த ஹேரத்

(ஆர்.யசி)

கொவிட்-19 வைரஸுக்கான இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான தேவை ஏற்படின் அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இரண்டு தடுப்பூசிகள் ஏற்றிக் கொண்டவர்களுக்கு துணை தடுப்பூசியாக மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து ஆராயப்படுவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை காட்டுகின்றது, இறுதியாக பதிவாகியுள்ள 48 கொவிட் மரணங்களுடன் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 4,195 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேபோல் நாட்டில் சகல பகுதிகளிலும் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் இது சமூக பரவல் என நாம் ஒரு நிலைப்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. இப்போது அவ்வாறான தீர்மானத்தை அறிவிக்கவும் முடியாது. ஆனால் நாடு அச்சுறுத்தல் நிலையில் உள்ளதென்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

இந்நிலையில் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களும் மிக கவனமாக தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு விட்டோம் என்பதற்காக கொவிட் வைரஸ் தொற்றாது என அர்த்தப்படாது. இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கும் கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி கூடுவதுடன் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் தொற்றும் வீதமும் குறைவடையும் என்பதே இதன் பிரதான காரணியாகும். 

ஆகவே தடுப்பூசிகள் ஏற்றிக் கொண்டால் வைரஸ் தொற்றாது என்ற நிலைப்பாட்டிற்கு எவரும் வரக்கூடாது. விரைவாக சகலரும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதுடன், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.

வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களின் நோயெதிர்ப்பு செயற்பாடுகள் எவ்வாறானது என்பதை ஆய்வு செய்து வருகின்றோம். 

இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் துணை தடுப்பூசியாக மூன்றாம் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டால் அதனை அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலோசனைக் குழுவில் இது குறித்து அறிவுறுத்தல்கள் விடப்படும்.

நாட்டில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக கூறுகின்ற போதிலும் அவ்வாறான தட்டுப்பாடு இல்லை. இந்தியாவை போன்று பாரதூரமான நிலையொன்றை நாம் இன்னமும் அடையவில்லை. தேவையான நோயாளர்களுக்கான ஒட்சிசன் எம்மிடம் உள்ளது. மேலதிகமாகவும் உள்ளது. ஆகவே இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

டெல்டா வைரஸ் தொற்றாளர்களுக்கே அதிகளவில் ஒட்சிசன் தேவைப்படுகின்றது. வழமையான கொவிட்19 வைரஸ் தொற்றாளர்களுக்கு பயன்படும் ஓட்சிசனை விடவும் அதிகளவில் டெல்டா வைரஸ் தொற்றாளர்களுக்கு தேவைப்படுகின்ற காரணத்தினால் இந்த அச்சுறுத்தல் நிலை குறித்து சிலர் கூறலாம். ஆனால் இப்போது அவ்வாறான அச்சுறுத்தல் நிலை இல்லை என்பதை நாம் உறுதிப்படுத்துகின்றோம்.

எனினும் நாட்டில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 10 வீதத்தால் தொற்றுநோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பை தரவுகள் காட்டுகின்றன. இந்நிலையில் ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் புதிதாக கொத்தணியொன்று உருவாகக்கூடிய நிலைமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment