வடக்கு மக்களின் வீட்டுத் திட்ட கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும், மாறாக அவர்களை ஜெனிவாவுக்கு தள்ளிவிடக் கூடாது : இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

வடக்கு மக்களின் வீட்டுத் திட்ட கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும், மாறாக அவர்களை ஜெனிவாவுக்கு தள்ளிவிடக் கூடாது : இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மக்களின் வீட்டுத் திட்ட கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மாறாக இதனை அரசியலாக்கி அவர்களை ஜெனிவாவுக்கு தள்ளிவிடக் கூடாது. வசதி குறைந்த மக்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலேயே வீடமைப்பு அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வசதி குறைந்த மக்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலே 1979 இல் வீடமைப்பு அதிகார சபை அமைக்கப்பட்டது. நாட்டில் எந்த பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களாக இருந்தாலும் அவர்கள் யார், எந்த இனம், கட்சி என பார்க்காமலே இந்த துறையை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் வடக்கில் வீடமைப்பு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது, யுத்தத்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அநாதரவான குடுங்களுமாகும்.

அங்கு கட்டப்பட்ட தங்களின் வீடுகள் பூரணப்படுத்தப்படாமல் இருப்பதால், அதனை பூரணப்படுத்தி தர வேண்டும். அதற்காக வழங்கப்பட்டு வந்த அவர்களுக்கான கடன் கொடுப்பனவு வசதிகளை அரசாங்கம் நிறுத்தி இருக்கின்றது. அதனை வழங்க வேண்டும் என்பது அவர்களின் நியாயமான கோரிக்கையாகும்.

மேலும் இந்த மக்களின் நியாயமாக கோரிக்கைகளை அந்த மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் முன்வைக்கின்றபோது, அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாறாக குறுகிய அரசியலுக்காக இன, மத, அரசியல் வேறுபாடுகளைக்காட்டி, அவர்களை ஜெனிவாவுக்கு தள்ளிவிடக் கூடாது.

நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம், இலங்கையர்கள் என்றே பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எமது நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாது.

அத்துடன் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்து வடக்கில் 5 மாவட்டங்களில் 76 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 480 முன்மாதிரி வீட்டுத் திட்டங்களை அமைத்திருந்தார். இது வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்றதாகும்.

அதனால் வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்தி, அதற்கு பயனாளிகளை தெரிவு செய்யும்போது, அரசியல், கட்சி பேதங்களை பார்க்காது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad