சுமைதாங்கி வந்ததால், சுமைநீங்கும் சகோதரர்கள்! - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

சுமைதாங்கி வந்ததால், சுமைநீங்கும் சகோதரர்கள்!

சுஐப் எம்.காசிம்

நாமொன்று நினைக்க நாட்டில் இன்னொன்று நடக்கிறதே என்று, சிறுபான்மை அபிமானிகள் சிலர் சிந்திக்கின்றனர். தமது எண்ணங்கள் யதார்த்தமாகி நிறைவேற வேண்டுமென எதிர்பார்த்த சிலரின் உளத்துடிப்புக்கள் தான் இவை. பாராளுமன்றத்துக்கு பஷில் ராஜபக்ஷ வந்தகையோடு அமைச்சரவை மாற்றம், அந்த மாற்றங்களுக்குள் சில புதிய முகங்கள், இவைகள்தான் கடந்தவாரப் பேசுபொருள். பெரும்பாலும், சிறுபான்மைச் சமூகங்களின் தளங்களில்தான் இப்படிப் பேசப்பட்டன. அதிலும், முஸ்லிம் சமூகப் பேசுபொருளே இதுவாகத்தானிருந்தது.

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம், இரட்டைப் பிரஜாவுரிமை சட்டமூலங்களை தனித்துவக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரித்த பின்னர், படிப்படியாக வளர்ந்த அல்லது வளர்க்கப்பட்ட மனநிலைகள்தான் இவை. ஆனால், இப்போது நடந்திருப்பவையும் சில செய்திகளைக் கிளறச் செய்திருக்கின்றன. அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்யும் சக்திகள் உள்ளுக்குள்ளோ அல்லது வெளியிலோ இனி அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி. அரசாங்கத்திற்குள் அதிரடியாக உள்வாங்கப்பட்டுள்ள மற்றொரு ஆளுமையின் வருகை, இதைத்தான் பறைசாற்றுகிறது. இவரின் அசைவுகளால் எழும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதானே, நாட்டின் பிரதான இரண்டு தேசிய கட்சிகளின் முதுகெலும்பை முறித்து படுக்கையிலும் போட்டுள்ளது. இதற்கான விளம்பரமாகப் பயன்படுத்தப்பட்டவர் வேறாக இருக்கலாம். பயன்படுத்திய முறைகள் எல்லாம் இவருடையதுதானே! இப்படியொருவரின் தேவை, அரசுக்கு அவசரமாகத் தேவைப்பட்டிருக்கிறதே! ஏன்?இதுதான் இன்று எழுந்துள்ள கேள்வி?

சட்டத்தின் பார்வையில் எப்படியெல்லாம் அலசப்பட்டும், பட்டப்பகலில் வர்த்தமானி வெளிவந்து, அனைத்தையும் அரசு முடித்ததில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. இனியேற்படப் போகும் அனைத்துக்கும் பஷில்தான் சுமைதாங்கி. இவருக்கு மேலுள்ள மூன்று சகோதரர்களும் இனி சுமைநீங்கிகள். இவ்வாறான, பார்வைகளையே பஷிலின் பாராளுமன்றப் பாய்ச்சல் தோற்றுவித்திருக்கிறது. எம்.பி பதவியை, பஷிலுக்காக துறந்த ஜெயந்த கெடகொடவும் இதைத்தான் எதிர்வு கூறியிருந்தார். "எம்.பி பதவியை விட எனக்கு நாட்டின் பலம்தான் பிரதானம் என்றார்". அவ்வாறானால் நாடு, இப்போது பலவீனப்பட்டா இருக்கிறது? இந்தக் கேள்விக்குரிய விடைகளும் இதற்குப் பின்னர் நிகழவுள்ள மாற்றங்களில் இருக்கின்றன.

பஷிலின் பிரவேசத்தைப் பாராட்டிப் பேசிய, தனித்துவ எம்.பிக்களின் தொனிகளிலும், அவரது ஆளுமைக்கான ஆதாரங்கள்தானே தென்பட்டிருந்தன. ஒன்று மட்டும் உண்மை, இவர்கள் அரசுக்குள் வருவதற்கான வாசலை பஷில்தான் திறக்க வேண்டியுள்ளது. சட்டமூலங்களை ஆதரிப்பது, அதற்கான அனுகூலங்கள் பற்றியெல்லாம் பேசப்பட்டதும் இவரிடம் தானே!

சமூக அபிலாஷைகளை அடைவது, பிராந்திய மற்றும் பிரதேச ஆபத்துக்களை அரசின் ஆதரவுடன் இல்லாமல் செய்தலுக்காகத்தான், அரசாங்கத்தை அணுகிச் சென்றிருந்தனர் இவர்கள். இந்த அணுகுமுறைகள் கால ஓட்டத்தில் அரசியல் களங்களை மாற்றி, புதிய நட்புக்களை ஏற்படுத்துமென்ற நம்பிக்கைகள், பஷிலை நாடுவோரிடம் இல்லாமலிருக்காது. இதற்காக களங்கள் மாறும் வரை இவர்கள் காத்திருக்கவே வேண்டும். இங்குதான், எண்ணத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்வது அவசியப்படுகிறது.

கிட்டத்தட்ட 150 ஆசனங்களுள்ள இந்த அரசாங்கத்திற்கு (ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன முன்னணி) தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தேவை ஏன் எழ வேண்டும்? பத்து பங்காளிக் கட்சிகள் உள்ள இந்த அரசில், முக்கியமான சிலருக்கே இன்னும் அமைச்சுக்கள் வழங்கப்படவில்லை. இதற்குள், வேறு கட்சிகளையும் இணைத்து வம்பை விலைக்கு வாங்குவற்கு யார்தான் விரும்புவர்? தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் தேசிய பிரச்சினையைத் தீர்த்து வைத்தல் அல்லது போதிய பலமில்லாது கவிழவுள்ள அரசைக் காப்பாற்றல், சம அளவிலான அரசியல் பலங்கள் தொடர்ச்சியாக தேர்தலில் நிலைப்படுதல், மேலும், இனம் அல்லது மதத்தின் வேற்றுணர்வுகளால் பெருந் தேசம் பிளவுபடல் போன்ற நிலைமைகள், நெருக்கடிகளில்தான் தேசிய அரசாங்கத்தின் தேவைகள் உணரப்படுவதுண்டு. இப்போது, இந்தத் தேவைகள் எதுவும் நாட்டில் இருக்கிறதா?

இல்லை என்பதற்கும் இல்லைதான். இப்போதுள்ள ஆளுமைகளின் போக்குகள் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் அளவிலில்லை. இதற்கான நியாயங்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லும் நிலைமையிலும் இவரது சகோதரர்கள் இல்லை. இதனால், மத்தளத்தின் மேனிபோல் இரண்டு பக்கமும் அடிதாங்கப் போகிறார் பஷில். கடும்போக்குகளைக் கட்டுப்படுத்துவது, கட்டுப்படாவிடின் கரையேற்றுவது, சர்வதேசத்தை சமாளிப்பது, சங்கடம் ஏற்பட்டால் சகோதர சமூகங்களைச் சேர்த்துக்கொள்வது. பங்காளிகளைக் கரையேற்றிவிட்டாலும் கை கொடுக்கத்தான் கட்சிகளிருக்கிறதே!

இதில், இன்னுமொன்றும் உள்ளதுதான். தென்னிலங்கையின் இருப்புக்களை தொடர்ந்தும் கடும்போக்கில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்படுமானால், மாற்று வழிகளுக்கான மருந்தாகத்தான் பஷில் பாவிக்கப்படப்போகிறார். ராஜபக்ஷக்களின் செல்வாக்குகளை இந்த நாட்டில் நிலைப்படுத்தவே இந்தச் சகோதரர்கள் விரும்புகின்றனர். இதுதான் இவர்களின் வியூகம். இல்லாவிட்டால் 'அண்ணன், தம்பிகளுக்குள் குழப்பம், அமெரிக்காவுக்கு பஷில் தப்பிச் சென்றுவிட்டார்' என, நமது தளங்களில் பேசப்பட்ட அதே பஷில், நாட்டின் சுமைதாங்கியாக எப்படி வருவது?

இலங்கையில் மாற்று ஆளுமைகளை வளர்ப்பதை விட, அடையாளங்காணப்பட்ட ஆளுமைகளை வளர்ப்பதுதானே அமெரிக்கா, அயல் நாடு, உட்பட்ட அனைவருக்கும் இலகுவானது. இதனால்தான், இந்தச் சுமைதாங்கி, தோள்பட்டையை தூக்கப் போகிறாரோ தெரியாது.

No comments:

Post a Comment