போதுமானளவு அஸ்ராசெனேகா நாட்டை வந்தடையும் - பைஸரை மன்னார் மீனவர்களுக்கு வழங்கத் தீர்மானம் - சினோவெக்ஸ் தொடர்பான தகவல்கள் எமக்குத் தெரியாது : பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

போதுமானளவு அஸ்ராசெனேகா நாட்டை வந்தடையும் - பைஸரை மன்னார் மீனவர்களுக்கு வழங்கத் தீர்மானம் - சினோவெக்ஸ் தொடர்பான தகவல்கள் எமக்குத் தெரியாது : பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(நா.தனுஜா)

போதுமானளவு அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்றும் அதன் பின்னர் அஸ்ராசெனேகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணக்கூடிய நிலையொன்று காணப்படுவதால், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகக் கூடிய உயர் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளனர். ஆகவே ஏற்கனவே நாட்டை வந்தடைந்த பைஸர் தடுப்பூசிகளை அப்பகுதி மீனவ சமூகத்திற்கு வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசி வழங்கல் நிறுத்தப்பட்டமை
பாதுகாப்பானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏதேனுமொரு தடுப்பூசியை முதலாம் கட்டமாகப் பெறும் நபருக்கு இரண்டாம் கட்டமாகவும் அதே தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதே மிகவும் சிறந்ததாகும். 

ஆனால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி முதலாம் கட்டமாகக் குறித்தவொரு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட ஒருவருக்கு இரண்டாம் கட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறிதொரு தடுப்பூசியை வழங்கினாலும் கொவிட்-19 வைரஸிற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உருவாவது கண்டறியப்பட்டது.

எனவேதான் எமது நாட்டில் உயர் அச்சுறுத்தல் வாய்ந்த பகுதியான கொழும்பு மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் 55 - 69 வயதுப் பிரிவினரில் முதலாம் கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

ஆனால் போதுமானளவு அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் விரைவில் நாட்டை வந்தடையும் என்று சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாகவே அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

பைஸர் தடுப்பூசியால் எவ்வித பாதிப்புக்களும் இல்லை
அங்கீகாரமளிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதால் ஏதேனும் பாதிப்புக்கள் அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில், அதுகுறித்து உடனடியாக எமக்கு அறிவிக்கப்படும். எனினும் இதுவரையில் தடுப்பூசிகளால் பாரதூரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் எவையும் பதிவாகவில்லை.

பைஸர் தடுப்பூசியை வழங்குவதால் எவ்வித பாதிப்புக்களும், பக்கவிளைவுகளும் ஏற்படாது. பாதிப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாக அதனை இடைநிறுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக போதுமானளவு அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுவதனாலேயே அது பைஸர் தடுப்பூசி வழங்கல் இடைநிறுத்தப்பட்டது.

அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் 19 ஆம் திகதி கிடைக்கப் பெறும்
இந்நிலையில் போதுமானளவு அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் இம்மாதம் 19 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சிலவேளைகளில் அதில் தாமதமேற்படலாம். இருப்பினும் தற்போதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் 19 ஆம் திகதி அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும். 

அதனைத்தொடர்ந்து அஸ்ராசெனேகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். இதன்போது அனைவரும் முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களிலேயே இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான முன்பதிவை மேற்கொள்வது பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பைஸர் தடுப்பூசி
அதேவேளை மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றது. அதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படுகின்றது. 

எனவே ஏற்கனவே நாட்டை வந்தடைந்த 25,000 பைஸர் தடுப்பூசிகளில், அஸ்ராசெனேகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்ற குறித்த எண்ணிக்கையானோருக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் எஞ்சியிருக்கும் பைஸர் தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தின் மீனவ சமூகத்தை மையப்படுத்தி வழங்கப்படவுள்ளது. 

அதேபோன்று யாழ் மாவட்டத்தில் சைனோபாம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகளைக் களஞ்சியப்படுத்துவதற்கான போதிய வசதிகள் உள்ளன
இதுவரை நாட்டை வந்தடைந்துள்ள தடுப்பூசிகளை உரிய வெப்பநிலையில் களஞ்சியப்படுத்துவதற்கு அவசியமான போதிய வசதிகள் உள்ளன. அதேபோன்று மன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசிகளைக் களஞ்சியப்படுத்துவதற்கு அவசியமான வசதிகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சினோவெக்ஸ் தடுப்பூசி தொடர்பான தகவல்கள் எமக்குத் தெரியாது
மேலும் சினோவெக்ஸ் தடுப்பூசியைக் கொள்வனவு செய்வது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்துகை தொடர்பான இராஜாங்க அமைச்சின் ஊடாகவே கையாளப்படுகின்றன. அது குறித்த விபரங்கள் எமக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment