'சிரச' ஊடக நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்த உண்மைத் தகவல்களை பகிரங்கப்படுத்த வேண்டும் : நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்மை விமர்சித்த ஊடகங்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்படவில்லை - ருவன் விஜேவர்தன - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

'சிரச' ஊடக நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்த உண்மைத் தகவல்களை பகிரங்கப்படுத்த வேண்டும் : நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்மை விமர்சித்த ஊடகங்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்படவில்லை - ருவன் விஜேவர்தன

(நா.தனுஜா)

'சிரச' ஊடக நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்த உண்மைத் தகவல்களை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ருவன் விஜேவர்தன நேற்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, வரலாற்றுக் காலம் தொடக்கம் ஊடகத்துறையின் உரிமைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுத்து வந்துள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிதான் ஊடகங்களினால் அதிகளவில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருபோதும் ஊடகத்துறையை முடக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஊடக சந்திப்புக்களின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெகுவாக விமர்சிக்கப்பட்டார். பௌத்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்ட அவர் இவ்வாறான விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. அதுவே ஜனநாயகக் கோட்பாட்டின் உச்சபட்ச வெளிப்பாடாகும்.

ஊடகத் துறையினால் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதென்பது நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அவசியமான முக்கிய விடயமாகும். 

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் 2005 - 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் கொடூரமான வகையில் தாக்கப்பட்டதுடன் ஊடக நிறுவனங்கள் மீது குண்டுத் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன. 

அதில் 'சிரச' ஊடக நிறுவனம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் பிரதான காரியாலயம் திடீர் தீ விபத்துக்குள்ளானதுடன் குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானது. 'சியத' ஊடக நிறுவனத்தின் காரியாலயமும் தீ விபத்துக்குள்ளாக்கப்பட்டமை ஓர் இருண்ட யுகத்தின் கூறுகளாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்மை விமர்சித்த ஊடகங்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்படவில்லை. ஊடக சுதந்திரத்தை முடக்கவுமில்லை. தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அதனைத் திருத்திக் கொண்டு நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு சென்றோம். தற்போதைய அரசாங்கம் சிரச ஊடக நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் வெளிப்பட்டிருக்கின்றன.

சிரச ஊடக நிறுவனம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துகின்றது. பொருளாதார நெருக்கடி, உரப் பிரச்சினை என மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாளாந்தம் வெளிக் கொண்டுவரும் பிரதான ஊடக நிறுவனமாகவே இதனை கருத வேண்டும். 

ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவதன் ஊடாக மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்க முடியும் என்று அரச நிர்வாகம் கருதுவதானது பிளாஸ்டிக் பந்தை நீருக்குள் மறைத்து வைக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.

பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உரியதாகும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம். அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவதை விடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். 

சிரச ஊடக நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்த உண்மைத் தகவல்களை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும். அதேவேளை ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad