'சேர் ஃபெயில்' : அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

'சேர் ஃபெயில்' : அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(நா.தனுஜா)

அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு, எரிபொருள் விலையேற்றம், உரத்திற்கான தட்டுப்பாடு, இலவசக் கல்வியில் இடையூறு ஏற்படுத்துவதற்கான முயற்சி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அரசாங்கம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் தற்போது முன்னெடுத்து வரும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முழுமையாக முடிவிற்குக்கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் தொழிற்சங்கங்களும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து விதமான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்கிழமை கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான அசோக அபேசிங்க, முஜிபுர் ரகுமான், வடிவேல் சுரேஷ் உள்ளிட்டோரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்களான அரச சேவை ஐக்கிய தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய சேவையாளர் சங்கம், ஐக்கிய தேசிய சுயதொழில் பெண்கள் அமைப்பு போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் 'மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் குடும்ப செயற்பாடுகளைத் தோற்கடிப்போம்', 'கப்பல் மூழ்கியதால் சிலர் நன்மையடைந்தனர்', 'கோட்டாபயவின் இலக்கு - ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, டொலரின் பெறுமதி அதிகரிப்பு', 'தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்து' ஆகியவை உள்ளடங்கலாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் அவற்றை விமர்சிக்கும் வகையிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் 'சேர் ஃபெயில்', 'கோட்டாபயவினாலும் பசிலினாலும் முடியாது என்று நாம் ஏற்கனவே கூறினோம்', 'பொதுமக்களுக்கு மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோஷங்களையும் எழுப்பினர்.

No comments:

Post a Comment