பசில் ராஜபக்ஷவை வட்­ட­மிடும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் : அமைச்சு பதவியை பெறுபவர்களில் தானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்ற காய்நகர்த்தல் : முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம், முஜிபூர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

பசில் ராஜபக்ஷவை வட்­ட­மிடும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் : அமைச்சு பதவியை பெறுபவர்களில் தானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்ற காய்நகர்த்தல் : முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம், முஜிபூர் ரஹ்மான்

முஸ்லிம் அர­சி­யலின் வீரியம் முற்­றாக தேய்­வ­டைந்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டிருக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்­ப­தற்கு எந்­த­வொரு மக்கள் பிரதிநிதிகளுக்கும் தைரியம் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. 

பாரா­ளு­மன்­றத்தில் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ரிஷாத் பதி­யுதீன் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். அவர் இன்னும் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அவரை விசா­ர­ணைக்கு நீதிமன்­றத்­திற்கு அழைத்­து­ வ­ரும் ஒவ்­வொரு வேளை­யிலும் நீதிபதிகளில் ஒருவர் வழக்­கி­லி­ருந்து தாமாக விலகிக் கொள்கின்றனர். இது­வ­ரைக்கும் நான்கு நீதி­ப­திகள் விலகியுள்ளார்கள்.

ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோர்கள் முஸ்­லிம்­களின் பிரச்சி­னைகள் குறித்து பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும், ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் சமூகத்தைப் பற்­றிய சிந்­த­னையே இல்­லாமல் அவர்கள் அரசாங்கத்தோடு இணைந்து செயற்­பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் பத­வி­களின் மீது ஆசை வைத்து காத்துக் கொண்டிருக்கின்­றார்கள். 

மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­ சப்ரி ரஹீம் புத்த­ளத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் தாங்கள் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு முன்­ன­தாக இரா­ஜாங்க அமைச்சர் பத­வியை கோரி­ய­தா­கவும், அந்த அமைச்சர் பதவி கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கையில் உள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

கட்­சியின் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் அர­சாங்­கத்­துடன் இணைந்து கொள்­வ­தற்­கு­ரிய எண்­ணத்தை முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசால் காசிம் தனியார் தொலைக்காட்சி ஒன்­றுக்கு தெரி­வித்­துள்ளார்.

இத­னி­டையே விவ­சா­யத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­படும் உரம் மற்றும் இர­சா­யன வள­மாக்­கி­களின் விலை­களில் பாரிய அதி­க­ரிப்பும், தட்டுப்­பாடும் ஏற்­பட்­டுள்­ளன. வியா­பா­ரிகள் அவற்றை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்­பனை செய்து கொண்­டி­ருப்­ப­தாக விவசா­யிகள் தெரி­விக்­கின்­றார்கள். நாளாந்தம் விவ­சா­யிகள் போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்யப்­பட்ட நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளார்கள். இவர்கள் அம்­பாறை மாவட்ட விவ­சா­யி­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஒரு வார்த்­தை­யேனும் பாரா­ளு­மன்­றத்­திலும், பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளி­யிலும் பேச­வில்லை. அர­சாங்­கத்­திடம் விவ­சா­யி­களின் பிரச்சினை­க­ளுக்கு தீர்­வு­களை கேட்டு கோரிக்கை விடுத்தால் தாங்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது போய்­விடும் என்ற பதவி ஆசையில் வாய் திறக்­காது இருக்­கின்­றார்கள்.

இதேவேளை, அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­வதில் இவர்களிடையே பலத்த போட்டி காணப்­ப­டு­கின்­றது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்­படும் எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அமைச்சர் பதவி கிடைக்­காது. ஒருவர் அல்­லது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்­கலாம். இதனால் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ப­வர்­களில் தானும் ஒரு­வ­ராக இருக்க வேண்­டு­மென்று காய்­ந­கர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 

20வது திருத்தச் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட நாள் முதல் முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒற்­று­மை­யா­கவே செயற்­பட்டுக் கொண்­டார்கள். இப்­போது ஒவ்­வொ­ரு­வரும் தனித்­த­னி­யாக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இத்­த­கைய ஓட்­டத்தை பசில்­ ரா­ஜபக்ஷ அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாட்­டிற்கு திரும்பியதன் பின்­னரே அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

பசில் ­ரா­ஜபக்ஷவு­டன்தான் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கு­ரிய உடன்­பா­டு­களைக் கண்­டி­ருந்­தார்கள். பசில் ­ரா­ஜபக்ஷ அமெ­ரிக்கா சென்­றதும் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மிகுந்த கவ­லையில் இருந்­தார்கள். அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கிவிட்டு தாம் நடு­ வீ­தியில் நிற்­பது போன்­ற­தொரு உணர்வை இவர்கள் கொண்­டி­ருந்­தார்கள்.

அவர் மீண்டும் நாட்­டிற்கு திரும்­பு­வாரா என்­பது கூட கேள்விக் குறியா­கவே இருந்­தது. இப்­போது பசில் ­ரா­ஜபக்ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அமைச்சர் பத­வி­யையும் பெற்றுக் கொண்டுள்ளார். பசில் ­ரா­ஜபக்ஷவின் வருகை முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பொறுத்­த­வரை போன உயிர் திரும்பி வந்­த­தா­கவே இருக்­கின்­றது.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சி வரிசையில் இருந்து கொண்டு அர­சாங்­கத்தின் தரப்­பி­ன­ராகச் செயற்­ப­டு­வ­தனை விடவும் ஆளும் கட்சி வரி­சையில் இருந்து அரசாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் முடி­வினை எடுத்­துள்­ளார்கள்.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டால், அதன் மூல­மாக அவர்­க­ளது கட்சியை வளர்க்க முடி­யாது. அவர்கள் அடுத்த பாரா­ளு­மன்ற தேர்தலில் பொது­ஜன பெர­மு­ன­வுடன் போட்­டி­யிட வேண்டும். அதனால், பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளாக மாற வேண்டும். அப்­போ­துதான் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்ளலாம். 

அமைச்சர் பத­வி­யையே தமது இலக்­காகக் கொண்­டுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து கொண்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. 

அம்­பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர் தமது கோரிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் நிறை­வேற்றும் பட்­சத்தில் அக்­கட்­சியில் அடுத்த தேர்­தலில் போட்டியி­டுவேன் என்று ஓர் இடத்தில் தெரி­வித்­துள்ளார்.

இதேவேளை, பொது­ஜன பெர­மு­ன­வுடன் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்­பி­னர்­களை எடுத்துக் கொண்டால் அவர்களினாலும் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளுந்­த­ரப்­பினர் என்ற அடிப்­ப­டையில் தீர்­வு­களைப் பெற்றுக் கொடுக்க முடி­யாத நிலையே உள்­ளது. 

அவர்­களில் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அலி சப்ரி நீதி அமைச்­ச­ராக இருந்து கொண்­டி­ருக்­கின்றார். அவர் நீதி அமைச்சர் என்­றாலும், ஆட்­சி­யா­ளர்­களின் திட்­டங்­க­ளுக்கு அமைவாகவே செயற்­பட முடியும்.

முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தை இல்­லாமல் செய்யும் நடவடிக்கை­களை ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொண்­டுள்­ளார்கள். ஒவ்வொரு அர­சாங்­கமும் அதனை மாற்­றி­ய­மைக்க முயற்சி எடுத்த போதிலும் முஸ்­லிம்­க­ளினால் காட்­டப்­பட்ட எதிர்ப்­புக்கள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முயற்­சி­க­ளினால் அந்த நடவடிக்கைகள் முறி­ய­டிக்­கப்­பட்­டன. இன்­றைய நிலையில் கடந்த காலத்தைப் போன்று தமது எதிர்ப்பைக் காட்­டு­வ­தற்­கு­ரிய வீரியம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களுக்கு இருப்­ப­தாகத் தெரியவில்லை.

ஆனால், இப்­போது ஆட்­சி­யா­ளர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்­டுள்­ளார்கள். ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் பௌத்த இன­வாதத் தேரர்­க­ளுக்கும் இடையே பலத்த முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. அதனால், முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தில் உள்ளவற்றில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கும், சில­வற்றை இல்லாமல் செய்­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு அமைச்சரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. காதி­ நீ­தி­மன்ற முறைமையை இல்­லாமல் செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் இடம்பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இந்த ஆலோ­ச­னையை தான் முன்­வைக்­க­வில்லை. அது குறித்து என்னால் எதுவும் பேச முடி­யா­தென்று நீதி அமைச்சர் அலி ­சப்ரி தெரி­வித்­துள்ளார்.

காதி நீதிமன்ற முறையிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள குறைகளையும் நிவர்த்தி செய்வதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. ஆனால், அவற்றை முழுமையாக இல்லாமல் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனவாத ஒடுக்குதலாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். ஆதலால், நீதி அமைச்சர் இதில் நழுவல் போக்கை கடைப்பிடித்து தமது சமூகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளாது செயற்படுவதற்கு முன்வருதல் வேண்டும்.

இதேவேளை, ஆட்சியாளர்கள் பௌத்த இனவாதத் தேரர்களின் முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கும், தேர்தல் காலங்களில் தாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தயங்கப் போவதில்லை என்று காட்டுவதற்கு முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவே தெரிகின்றது.

Vidivelli

No comments:

Post a Comment