(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முழு அரசாங்கமும் சகல துறைகளிலும் தோல்வியடைந்து இலங்கையை மந்தமானதொரு நாடாக்கியுள்ளனர். நாம் எதிர்க்கட்சி என்ற போதிலும் அரசாங்கம் தோல்வியடைவதை விரும்பவில்லை. காரணம் அரசாங்கத்தின் தோல்வியால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் முதல் பத்து (டொப் டென்) தோல்விகளையும் நாம் மக்களுக்கு அறியத்தருகின்றோம். முதலாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக சகல துறைகளிலும் தோல்வியடைந்து இலங்கையை செயற்திறன் மிக்க நாடாக மாற்றுவதற்கு பதிலாக மந்தமானதொரு நாடாக மாற்றியுள்ளார்.
நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒன்றரை ஆண்டுக்குள் ரூபாவின் பெறுமதியை பூச்சியமாக்கி பொருளாதாரத்தை படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளார். கடன் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதாகக் கூறிய பிரதமர் தற்போது அவர்களுக்கு மதுபான உற்பத்தியை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கியிருக்கிறார். அரசாங்கத்திற்கு 17 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியவர்களுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று விளையாட்டுத்துறை சீரழித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சுகாதாரத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, துறைமுக அமைச்சர் றோஹித அபேகுணவர்தன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அனைவரும் அவர்களது துறையை மேம்படுத்த முடியாமல் மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி தோல்வியடைந்துள்ளனர்.
இவர்கள் அரசாங்கத்தின் முதற் பத்து தோல்விகளில் இடம்பிடித்துள்ள அமைச்சர்களாவர். ஆனால் இவர்களைப் போலவே ஏனையவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் அரசாங்கத்தின் தோல்வியை நாம் விரும்பவில்லை. காரணம் அரசாங்கத்தின் தோல்வியால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே இனியாவது தோல்வியடையாமல் வெற்றி பெற முயற்சிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:
Post a Comment