யானை - மனித மோதல்களைத் தடுக்க கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் விரைவில் மாற்றப்பட வேண்டும் : கோபா குழுவின் அறிக்கையில் பரிந்துரை - News View

Breaking

Friday, July 23, 2021

யானை - மனித மோதல்களைத் தடுக்க கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் விரைவில் மாற்றப்பட வேண்டும் : கோபா குழுவின் அறிக்கையில் பரிந்துரை

அதிகளவில் நிகழ்கின்ற காட்டு யானைகளின் மரணங்கள் மற்றும் மனிதர்களின் மரணங்கள், அதிகரித்து வருகின்ற சொத்து இழப்புக்களைப் பார்க்கின்றபோது யானை - மனித மோதல்கள் அதிக காலம் நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த இதுவரை பின்பற்றப்பட்ட கொள்கை விரைவில் மாற்றப்பட வேண்டும் என்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) பரிந்துரைத்துள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கையை அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அண்மையில் சபையில் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

யானை மனித மோதல்களால் உலகத்திலேயே அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை காணப்படுகிறது என கடந்த டிசம்பர் 09ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் யானை மனித மோதல்கள் காரணமாக வருடாந்தம் ஏறத்தாழ 272 யானைகள் உயிரிழக்கின்றன. 2019ஆம் ஆண்டில் 407 யானைகள் உயிரிழந்தமை குழுவில் தெரியவந்ததுடன், இழக்கப்படுகின்ற மனித உயிர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ வருடாந்தம் 85 என்றும், 2019ஆம் ஆண்டில் 122 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இங்கு புலப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது அவசியம் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறான நிலையில் இதுவரை வெற்றியளிக்காதபழைய கொள்கைகளைக் கைவிட்டு டாக்டர் பிருதிவிராஜ் பர்னாந்து தயாரித்த கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசத்தில் யானைகளைக் கட்டுப்படுத்தும் கொள்கை வெற்றியளிக்கவில்லை. உண்மையில் இங்கு கட்டுப்படுத்தலுக்கு உட்படுவது அப்பாவி பெண் விலங்குகளும் மற்றும் குட்டிகளும் மாத்திரமாகும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், மக்களுக்கும் கிராமங்களுக்கும் ஏற்படும் இழப்புக்களுக்குக் காரணம் அதிகளவில் ஆண் யானைகள் என்பதும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலிகமுவ பிரதேசத்தில் இது தொடர்பாக செயன்முறை ரீதியில் பரீட்சித்துப்பார்க்கப்பட்டதன் பின்னர், 7 வருடங்களுக்கும் அதிக காலமாக டாக்டர் பிரித்விராஜ் தயாரித்த கொள்கையின் மூலமாக இதுவரை இருந்த பிணக்குகள் ஓரளவு தணிந்துள்ளமையையும், இதன் நிமித்தம் மிகவும் குறைந்த அளவில் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் குழு அவதானித்துள்ளது.

யானை மனித மோதல்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக பெருந்தொகையான நிதியை செலவு செய்துள்ளபோதும், நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரிக்கின்றனவே தவிர குறையவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போது கூறினார். எனவே, அரசாங்கத்தின் நிதி பெருமளவில் இழக்கப்படும் இந்தத் தோல்வியடைந்த பழைய கொள்கைகள் விரைவில் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யானை மனித மோதல்களைக் குறைப்பதற்கு செயல்திறனைத் தயாரிக்க வேண்டியது வனஜீவராசிகள் திணைக்களத்தின் கடமையாகும். மேலும் யானை சரணாலயங்களுக்கு காணிகளை ஒதுக்கும்போது அக்காணிகள் மகாவலி அதிகாரசபை மற்றும் வனப்பேணுகை திணைக்களம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் உரியதாக இருப்பதால் அந்த இரண்டு நிறுவனங்களின் இணக்கமும் அவசியமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், கமத்தொழிலாளர் அமைப்புக்கள் மற்றும் கிராமவாசிகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு அவசியமானதென்றும் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment