ஜனாதிபதி, பிரதமரின் தோல்வியை நேரடியாகக்கூற முடியாதவர்களே போற்றிக் கொண்டிருக்கின்றனர் : முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

ஜனாதிபதி, பிரதமரின் தோல்வியை நேரடியாகக்கூற முடியாதவர்களே போற்றிக் கொண்டிருக்கின்றனர் : முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

அரசியலில் சிறந்த அறிவற்ற, பஷில் ராஜபக்ஷவிடம் ஏதேனுமொன்றை எதிர்பார்ப்பவர்களே அவரது பாராளுமன்ற வருகையை பெரிதாக பேசிக் கொண்டிருகின்றனர். ஜனாதிபதியும், பிரதமரும் தோல்வியடைந்துள்ளனர் என்பதை நேரடியாகக்கூற முடியாதவர்களே பஷில் ராஜபக்ஷவை போற்றிக் கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வர வேண்டுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது அவரது கட்சியின் பொறுப்பாகும். அது எமது பொறுப்பல்ல. 

எனினும் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாவிட்டாலும் அவரே தற்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது பிரதிநிதியாகவுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் என்ற வரிசையில் மூன்றாவதாக பஷில் ராஜபக்ஷவே காணப்படுகிறார்.

அவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாவிட்டாலும் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அமைச்சர்கள், அரசாங்கத்தின் அதிகாரிகள் என்பவர்களுடன் சகல கலந்துரையாடல்களிலும் பங்குபற்றுகின்றார். 

அவர் மூன்று விசேட ஜனாதிபதி செயலணிகளின் தலைவராகவும் காணப்படுகிறார். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சகல தீர்மானங்களிலும் அவர் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.

எனவே எங்கோ மறைந்திருந்து திடீரென வந்தவர் அல்ல. மூன்று ஜனாதிபதி செயலணிகளின் தலைவராக பதவி வகித்துக் கொண்டு இன்றும் அவர் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார். 

எனவே அவர் பாராளுமன்றத்திற்கு வரவுள்ளார் என்பதில் புதுமையொன்றும் கிடையாது. அரசியலை அறியாத, பஷில் ராஜபக்ஷவிடம் ஏதேனுமொன்றை எதிர்பார்க்கின்ற சிலரே இதனை பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சிறந்த அரசியல் அறிவுடையவர்கள் இதனை நன்கு அறிவார்கள். இந்த அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் அவருக்கு தெரியாமல் எடுப்பதுமில்லை. 

கோட்டா, மஹிந்த, பஷில் ஆகியோர் அரசாங்கத்திக் மும்மூர்த்திகளாவர். எனவே அவர் பாராளுமன்றத்திற்கு வருகிறார் என்பதற்காக புதிதாக ஏதேனும் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment