ஹிசாலினியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, July 30, 2021

ஹிசாலினியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின் மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் இன்று (30) காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது.

சுகாதார விதிமுறைக்கமைய விசேட வைத்திய குழுவினர்கள் முன்னிலையில் சிறுமி ஹிசாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பான முறையில் அனுப்புமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.

கொழும்பில் இருந்து வருகை தந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹன்ஷா அபேவர்த்தன நேற்று (29) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சிறுமி ஹிசாலியின் உடலை தோண்டி எடுக்க அனுமதி கோரி மனு ஒன்றினை சமர்பித்ததை அடுத்தே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதின் வீட்டில் பணி புரிந்த டயகம தோட்டத்தை சேர்ந்த ஜுட் ஹிசாலின் என்ற சிறுமி கடந்த 03ம் திகதி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 15 ஆம் திகதி மர்மான முறையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் டயகம தோட்ட மயானத்தில் கடந்த 16ம் திகதி அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஹிசாலியின் மரணத்தின் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் தோன்றியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்த வேண்டும் என கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறுமியின் தாயார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவும் புதைப்பட்ட மகளின் சடலத்தை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மனு ஒன்றினையும் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பு நீதிமன்றம் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

மலையக நிருபர் சுந்தரலிங்கம்

No comments:

Post a Comment