அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் கௌரவத்தை முற்றிலும் கேள்விக்குறியாக்கியுள்ளது : செயலணி முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதை ரணில் பாராளுமன்றம் சென்ற முதல் நாளிலேயே எடுத்துரைத்தார் - வஜிர அபேவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் கௌரவத்தை முற்றிலும் கேள்விக்குறியாக்கியுள்ளது : செயலணி முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதை ரணில் பாராளுமன்றம் சென்ற முதல் நாளிலேயே எடுத்துரைத்தார் - வஜிர அபேவர்தன

(நா.தனுஜா)

அரசியலமைப்பின்படி ஏதேனும் பணிப்புரைகள் ஊடாக அடிப்படை மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கோ அல்லது வேறெந்தத் தரப்பினருக்கோ வழங்கப்படவில்லை. எனவே அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடாகும். இவை சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் கௌரவத்தை முற்றிலும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளையும் கடுமையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமானதிலிருந்து, அதற்கு முகங்கொடுத்தல் மற்றும் மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்குதல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் மிகவும் மோசமானதொரு செயற்திட்டத்தையே பின்பற்றி வருகின்றது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களும் அரசியலமைப்புச் சரத்துக்களும் அரச நிர்வாகக் கட்டமைப்பும் முழுமையாகப் பாதிப்படையும் நிலையேற்பட்டிருக்கின்றது. தற்போதுள்ள நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், எதிர்வரும் சில மாத காலங்களில் இப்போதுள்ளதை விடவும் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும்.

உலகளாவிய ரீதியில் உருவான பல்வேறு கொவிட்-19 வைரஸ் திரிபுகளில் ஒன்றைத் தவிர, ஏனைய அனைத்துத் திரிபடைந்த வைரஸின் தொற்றுக்குள்ளானவர்கள் இலங்கையில் அடையாளங்காணப்பட்டிருக்கின்றார்கள். கொவிட்-19 திரிபான லம்ப்டா வைரஸ் மாத்திரமே எமது நாட்டில் இன்னமும் இனங்காணப்படவில்லை.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கும் நாடுகளும் அநேகமான பிரஜைகளுக்குத் தடுப்பூசியை வழங்கியிருக்கும் நாடுகளும் புதிய வைரஸ் திரிபுகளின் தாக்கத்தினால் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் எமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட செயலணி முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது என்ற விடயத்தை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் சென்ற முதலாவது நாளிலேயே எடுத்துரைத்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதாக் கூறி நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்சென்று சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, சட்டக்கோட்பாடுகளுக்கு அமைய செயற்படாத நாடு என்றுதான் ஏனைய சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் இலங்கை தொடர்பில் சிந்திக்கும். அதன் விளைவாக இலங்கைக்கான நிதி மற்றும் ஏனைய உதவிகள் கிடைக்காமல் போவதற்குரிய வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன.

இவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களை நாட்டு மக்களே எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்படும். ஆகையினாலேயே எந்தவொரு செயற்பாடுகளும் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment