ஆப்கானிஸ்தானிலுள்ள சுமார் 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

ஆப்கானிஸ்தானிலுள்ள சுமார் 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா

ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுமார் 50 தூதர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தெற்கு நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை தலிபான் போராளிகள் கைப்பற்றியதை அடுத்து, இந்திய விமானப்படை விமானத்தில் காந்தஹாரில் இருந்து சுமார் 50 தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளது.

தூதரகத்தில் இருந்த பணியாளர்கள் விமானப்படை விமானங்களினூடாக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

"ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது" என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"காந்தஹாரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மூடப்படவில்லை. இருப்பினும், காந்தஹார் நகருக்கு அருகே கடுமையான மோதல் காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் தற்போதைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது முற்றிலும் தற்காலிக நடவடிக்கை என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். தூதரகம் எங்கள் உள்ளூர் ஊழியர்கள் மூலம் தொடர்ந்து செயல்படுகிறது" என்று வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சியின் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக, ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களைக் சந்தித்துள்ளது.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் அமெரிக்கா தனது படைகளை வெளியேற்றுவதால் தலிபான்கள் நாட்டின் மீது கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகளை தற்சமயம் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad