(எம்.மனோசித்ரா)
தாதியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் தவறாக விமர்சித்தமைக்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டீ சொய்சாவிடம் 10 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொதுச்சேவை தாதியர் பிரிவு சங்கத்தின் தலைவர் அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தாதியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டீ சொய்சா விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆனால் அவர்கள் இதற்கு முன்னர் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.
கண்ணாடி வீடுகளுக்குள் இருந்து கொண்டு கல்லால் தாக்குவதற்கு தயாராக வேண்டாம் என்று நாம் அவரிடம் தெரிவிக்கின்றோம். தாதியர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்காகவே அவர்களும் தெரிந்தே நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்காமல் இருந்தனர்.
தாதியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை விமர்சிக்கும் சில வைத்தியர்களின் ஊதியம் சுமார் 2 இலட்சமாகும். ஏனைய கொடுப்பனவுகளுடன் இணைக்கும் போது அவர்களுக்கு 4 இலட்சம் ஊதியம் கிடைக்கப் பெறும். இந்த தரவுகளை ஜனாதிபதியிடம் காண்பித்த போது அவர் தனக்கு கூட இவ்வளவு ஊதியம் இல்லை என்று ஆச்சர்யமடைந்தார்.
எம்மீது அவர் முன்வைத்த விமர்சனங்களுக்கு எதிராக 10 கோடி ரூபா நஷ்டஈடு கோரி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம். தம்மீது குறைபாடுகளை வைத்துக் கொண்டு ஏனையோரை விமர்சிக்க வேண்டாம்.
தாதியர் சங்கங்களின் போராட்டங்களில் தலையிடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது ?
ஏதேனுமொரு தொழிற்சங்கம் போராடி அதன் உரிமையை வென்றெடுக்கும் போது அதனை நாம் ஒருபோதும் எதிர்ப்பதற்கு பழக்கப்படவில்லை. சிறந்த வைத்தியர்கள் எவரும் இவ்வாறு செயற்பட மாட்டார்கள் என்றார்.
No comments:
Post a Comment