கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டதும் சுதந்திர கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமல்ல - பாதுகாப்பு செயலாளர் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டதும் சுதந்திர கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமல்ல - பாதுகாப்பு செயலாளர்

(எம்.மனோசித்ரா)

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சிலர் கூறுவதைப் போன்று முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டதும் சுதந்திர கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமல்ல. இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் இராணுவ அதிகாரிகள் காணப்பட்ட போதிலும் அவர்களால் கற்பித்தலுடன் தொடர்புடைய விடயங்களில் எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது என்பதை பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்வதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குனரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த 

அவர் மேலும் கூறுகையில், சிலர் கூறுவதைப் போன்று இந்த பல்கலைக்கழகத்தில் எவருக்கேனும் நினைத்தபடி உயர் பட்டத்தினை வழங்க முடியாது என்பதை பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையில் மாத்திரமல்ல. உலகில் எந்தவொரு பாதுகாப்பு பல்கலைகழகத்திலும் உப வேந்தராக இராணுவ அதிகாரியே நியமிக்கப்படுவார்.

இவர் தவிர பிரதி உப வேந்தராக இராணுவ அதிகாரி காணப்படுவதோடு பிரிதொரு பேராசிரியரும் பிரதி உப வேந்தராக நியமிக்கப்படுவார்.

இவ்வாறு வழமையாக பின்பற்றப்பட்டு வரும் முறைமையை தவறாக விமர்சிப்பதானது சேர்.ஜோன் கொத்தலாவலவிற்கு ஏற்படுத்தப்படும் அவமதிப்பாகும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உயர் பட்டப்படிப்பை (பி.எச்.டி) நிறைவு செய்வதற்கு 210 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 10 பேர் மாத்திரமே பட்டத்தினைப் பெற்றுள்ளனர்.

பாராளுமன்றத்தில் எதிர்தரப்பினர் கூறுவதைப் போன்று நினைப்பவருக்கெல்லாம் இந்த பட்டத்தை பெற்றுக் கொள்ள முடியாது. பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டாலும் என்னாலும் அதனைப் குறுக்கு வழிகளில் பெற்றுக் கொள்ள முடியாது.

உயர்தர பரீட்சைகளில் சித்தி பெற்றிருப்பதோடு மாத்திரமின்றி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிகளும் நிச்சயம் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு புள்ளி குறைவடைந்தால் கூட அனுமதி வழங்கப்பட மாட்டாது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் சிவில் பிரஜைகளும் உள்ளனர். இராணுவ அதிகாரிகளும் உள்ளனர். எனினும் இந்த குழுவால் கல்வி நடவடிக்கைகளில் தலையிட முடியாது. மாறாக பல்கலைக்கழகத்தை எவ்வாறு மேலும் மேம்படுத்துவது , மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் மாத்திரமே தீர்மானங்களை முன்னெடுக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad