ஒரே நேரத்தில் தாக்கிய இரண்டு திரிபுகள் : கொரோனாவால் இறந்த 90 வயது மூதாட்டி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

ஒரே நேரத்தில் தாக்கிய இரண்டு திரிபுகள் : கொரோனாவால் இறந்த 90 வயது மூதாட்டி

பெல்ஜியத்தில் ஒரு 90 வயது மூதாட்டிக்கு கொரோனா வைரசின் ஆல்ஃபா மற்றும் பீட்டா திரிபுகள் ஒரே நேரத்தில் தொற்றி அவர் இறந்து போனார். 

இதையடுத்து, ஒரே நேரத்தில் இரண்டு வகை திரிபுகள் தொற்றுவது சாத்தியம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆல்ஃபா, பீட்டா திரிபுகள் முதலில் பிரிட்டனிலும், தென்னாப்பிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டவை.

நிகழும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டைத் தொற்று ஏற்பட்டு இறந்த மூதாட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்.

அவர் இரு வெவ்வேறு நபர்களிடம் இருந்து இந்த இரண்டு திரிபுகளையும் அவர் தொற்றிக் கொண்டிருக்கலாம் என்று அவரது மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இப்படி இரண்டு வித திரிபுகள் ஒரே நேரத்தில் தொற்றியதாக கண்டறியப்பட்ட முதல் நோயாளி இவர்தான் என்று கூறும் அவர்கள், இதுபோன்ற அரிதான தொற்றுகள் நிகழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.

ஐரோப்பிய பண்டுவ நுண்ணுயிரியல் & தொற்று நோய்கள் மாநாட்டில் (European Congress on Clinical Microbiology & Infectious Diseases) இந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட இரட்டைத் தொற்று குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில், 2 பேருக்கு ஒரே நேரத்தில் இரு வகை கொரோனா திரிபுகள் தொற்றியதாக பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அந்த இரண்டு திரிபுகளில் ஒன்று காமா திரிபு எனப்படும் கவலைக்குரிய திரிபு ஆகும்.

ஒருவகை கொரோனா தொற்றில் இருந்து தேறிவந்தபோது இரண்டாவது வகை தொற்று ஏற்பட்டதாக கருதப்படும் 17 வயது இளைஞர் ஒருவருக்கு போர்ச்சுகல் நாட்டு ஆய்வாளர்கள் அண்மையில் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் இந்த 90 வயது மூதாட்டி இரண்டு கவலைக்குரிய கொரோனா திரிபுகளால் பாதிக்கப்பட்டார். இந்த இரண்டு திரிபுகளும் வல்லுநர்கள் கவனத்தோடும், கவலையோடும் ஆராய்ந்து வருகிறவையாகும். இந்த மூதாட்டிக்கு உடல் நலம் சீர்கெட்டபோது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அவருக்கு சுவாசக் கோளாறு தீவிரமடைந்தது.

அங்கே அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ஆல்ஃபா, பீட்டா என்ற இரண்டு வகை கொரோனா திரிபுகளால் அவருக்கு கோவிட்-19 நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

"அந்த சமயத்தில் இந்த இரண்டு திரிபுகளுமே பெல்ஜியத்தில் காணப்பட்டன. எனவே இந்த மூதாட்டி இரண்டு நபர்கள் மூலம் இந்த இரண்டு வகை திரிபுகளையும் தொற்றிக் கொண்டிருக்கலாம்," என்று பெல்ஜியத்தின் ஆல்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள ஓ.எல்.வி. மருத்துவமனையை சேர்ந்த ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் அன்னீ வங்கீர்பெர்கன் தெரிவித்தார். 

ஆனால், அவர் அவருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது துரதிருஷ்டவசமாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

"அந்த மூதாட்டி தனியாக வசித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரை கவனித்துக் கொள்ள பல உதவியாளர்கள் அவர் இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

"நோயாளியின் உடல் நிலை வேகமாக சீர்கெட்டதற்கு இரண்டு கொரோனா திரிபுகள் ஒன்றாகத் தொற்றியதும் ஒரு காரணமாக இருக்குமா என்பதை கூறுவது கடினம்," என்றும் அவர் கூறினார்.

அடுத்தடுத்த நோயாளிகளுக்குத் தொற்றும்போது வைரஸ் தொடர்ந்து பரிணாமம் அடைகிறது. இதன் மூலம் புதிய வகைகள் அல்லது திரிபுகள் தோன்றுகின்றன. 

இப்படி கோவிட்-19 நோய் சில முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்த மாற்றங்கள் நோய்க்கு சில சாதகங்களைத் தரலாம். எடுத்துக் காட்டாக, புதியவர்களைத் தொற்றும் அதன் திறன் அதிகரிக்கலாம் அல்லது கடந்த காலத் தொற்றுகள் அல்லது தடுப்பூசி போட்டது ஆகியவற்றால் உடலுக்கு கிடைத்த நோய் எதிர்ப்பு ஆற்றலை ஏமாற்றும் திறன் அதற்கு வரலாம்.

இத்தகைய புதிய திரிபுகளில் மிகுந்த கவலையளிக்கும் திரிபுகள் கவனத்தோடு கண்காணிக்கப்படுகின்றன. இவற்றை கவலையளிக்கும் திரிபுகள் என்று அழைக்கிறார்கள்.

பிரிட்டனில் தற்போது டெல்டா திரிபுதான் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது போடப்படுகிற தடுப்பூசிகள் அந்த திரிபுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்குவதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.

புதிய தடுப்பூசிகளை, புதிய திரிபுகளுக்கு எதிராக மேலும் சிறப்பாக வேலை செய்யும் வகையிலும், பூஸ்டர் டோசாக வழங்கும் வகையிலும் விஞ்ஞானிகள் வடிவமைக்கின்றனர்.

"ஒரே நபர் உடலில் இருந்து இரண்டு கவலைக்குரிய கொரோனா திரிபுகளைக் கண்டுபிடிப்பது வியப்புக்குரியது அல்ல. தொற்று ஏற்பட்ட ஒரே நபரிடமோ, பலரிடமோ தொடர்பு கொண்டது மூலம் அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம்," என்று வார்விக் பல்கலைக்கழகத்தில் வைராலஜி வல்லுநராக உள்ள பேராசிரியர் லாரன்ஸ் யங் கூறியுள்ளார்.

இத்தகைய தொற்றுகள் தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்குமா, கோவிட்-19 நோய் மோசமாக பாதிக்கக் காரணமாக இருக்குமா என்பதை எல்லாம் தீர்மானிக்க மேலும் அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment