ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் பக்க விளைவாக இதய அழற்சி ஏற்படலாம் : ஐரோப்பிய மருத்துவ முகமை - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் பக்க விளைவாக இதய அழற்சி ஏற்படலாம் : ஐரோப்பிய மருத்துவ முகமை

கொரோனாவுக்கான ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு கூறியுள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவ முகமை கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட அதிகமாக இருப்பதாக மருந்து பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

இருப்பினும், மருத்துவர்களும் நோயாளிகளும் இதயத்தில் ஏற்படும் அழற்சி சார்ந்த அறிகுறிகள் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதயத்தில் வலி ஏற்படுவது, அவ்வப்போது சுவாசம் இல்லாத தன்மையை உணர்வது, திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது இதயத் துடிப்பு சீரற்று இருப்பது போன்றவை இதய அழற்சிக்கான அறிகுறிகள். 

யாருக்காவது இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து தங்களுக்கு இதய அழற்சி இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதய அழற்சி தொடர்புடைய மையோகார்டிட்டிஸ் மற்றும் பெரிகார்டிட்டிஸ் என்ற இரண்டு அறிகுறிகள் ஃபைசர் மற்றும் மொடர்னா கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதால் ஏற்படுகின்றன.

இதய தசைகளில் அழற்சி ஏற்படுவதுதான் மையோகார்டிட்டிஸ். இதயத்தில் இருக்கும் பெரிகார்டியம் பகுதிகளில் ஏற்படும் அழற்சிதான் பெரிகார்டிட்டிஸ்.

ஃபைசர் - பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 145 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 138 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது.

மொடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 19 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 19 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது என்று ஐரோப்பிய மருத்துவ முகமையின் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஐந்து பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அந்த ஐவரும் வயதானவர்கள், தவிர அவர்களுக்கு மற்ற பல உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக பிரிட்டன் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்காற்று முகமை விசாரித்து வருகிறது.
"கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்ட பின் இளம் வயது ஆண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் எழுகின்றன" என கூறியுள்ளது பிரிட்டனின் மருத்துவ மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்காற்று முகமை.

"இது போன்ற புகார்கள் மிக அரிதாகவே வருகின்றன. மேலும் லேசான அளவிலேயே இருக்கின்றன. இப்படி இதயம் சார்ந்த சிக்கல்களால் பாதிக்கப்படுவோர் வழக்கமான சிகிச்சைகள் பெற்று, போதிய ஓய்வில் இருந்தால் கொஞ்ச நாளிலேயே அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள்" என கூறியுள்ளது அந்த முகமை.

பெரும்பாலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு 14 நாட்களுக்குள் இப்படிப்பட்ட இதயக் கோளாறுகள், மிக அரிதாகவே ஏற்படுகின்றன.

தற்போது பிரிட்டனில் நடக்கும் தடுப்பூசி இயக்கத்தின் முக்கிய இலக்காக கருதப்படும் இளைஞர்களுக்குதான் இந்த பிரச்சனை பெரும்பாலும் ஏற்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டங்களின் போதே அதிகம் விவாதிக்கப்பட்டது.

பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் கொரோனாவால் ஏற்படும் பக்க விளைவுகள் பட்டியலில் மையோகார்டிட்டிஸ், பெரிகார்டிட்டிஸ் ஆகியவை அதிகாரபூர்வமாக சேர்க்கப்படவுள்ளன.
கடந்த ஜூன் மாதம்தான், ஃபைசர் மற்றும் மொடர்னா கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகளாக இந்த இரண்டு இதய அழற்சி பிரச்சனைகளையும் பட்டியலிட்டது அமெரிக்கா.

"கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு இதய அழற்சி ஏற்படுவது மிகவும் குறைவுதான். இருப்பினும் இத்தகைய இதய அழற்சி நோயின் அறிகுறிகள் தொடர்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அப்போதுதான் முறையாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற/அளிக்க அதன் மூலம் உடல் நலம் தேற, மேற்கொண்டு நோயினால் உடல் நிலை சிக்கலுக்கு உள்ளாகாமல் தடுக்க முடியும்," என்கிறது ஐரோப்பிய மருத்துவ முகமை.

எம்.ஆர்.என்.ஏ வகை தடுப்பூசிகளில்தான் இதய அழற்சி பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மரபணு மாற்றம் செய்த வைரசை பயன்படுத்தும் ஓக்ஸ்ஃபோர்ட் - அஸ்ட்ராசெனீகா மற்றும் ஜோன்சன் போன்ற தடுப்பூசிகளில் இந்த பிரச்சனைகள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad