இலஞ்ச ஊழல் வழக்குகள் 8 இலிருந்து விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, July 30, 2021

இலஞ்ச ஊழல் வழக்குகள் 8 இலிருந்து விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன இலஞ்ச ஊழல் வழக்குகள் 8 இலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (30) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகலவின் உத்தரவுக்கமைய இவ்வாறு குறித்த வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லொத்தர் சபைக்காக வாடகையின் அடிப்படையில் வாகனங்களை பெற்றதில் அரசாங்கத்தின் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006 - 2007 காலப் பகுதியில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்தன இருந்த காலத்தில் குறித்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்குகளின் அடிப்படையில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தாக்கல் செய்த 8 வழக்குகளையும் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவற்றை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதுள்ளதால், அவற்றை வாபஸ் பெறுவதாக, இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து வழக்கின் சந்தேகநபரான சரண குணவர்த விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (30) குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஆணைக்குழு சார்பில் முன்னிலையான அதன் உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தனி, குறித்த வழக்கை தாக்கல் செய்யும் போது ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரின் எழுத்து மூல நிலைப்பாடு முன்வைக்கப்படாமை காரணமாக, அதனை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் உள்ளதாக, நீதிமன்றிற்கு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சரண குணவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த வழக்கை தொடர முடியாதுள்ளதால் தனது கட்சிக்காரரை விடுதலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்த நீதவான், இவ்வாறு குறித்த வழக்குகள் 8 இலிருந்தும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, 2007 மே 5 ஆம் திகதி முதல் 2008 ஏப்ரல் 30 வரையிலான காலத்தில் அபிவிருத்தி லொத்தர் சபை தலைவராக இருந்தபோது மூன்று வாகனங்களை 9 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு பெற்றதன் மூலம் அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் சரண குணவர்தனவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்ப்பை எதிர்த்து முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment