கொக்கிளாய் முகத்துவாரத்திலிருந்து நாளாந்தம் சட்டவிரோத தொழிலுக்காக 1500 க்கு மேற்பட்ட தென்னிலங்கை படகுகள் படையெடுப்பு, கட்டுப்படுத்த வேண்டியவர்கள் உறக்கமா? - ரவிகரன் கேள்வி - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

கொக்கிளாய் முகத்துவாரத்திலிருந்து நாளாந்தம் சட்டவிரோத தொழிலுக்காக 1500 க்கு மேற்பட்ட தென்னிலங்கை படகுகள் படையெடுப்பு, கட்டுப்படுத்த வேண்டியவர்கள் உறக்கமா? - ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவு - கொக்கிளாய், முகத்துவாரம் பகுதியிலிருந்து நாளாந்தம் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்காக, 1500 க்கும் மேற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகள் முல்லைத்தீவு கடலுக்குள் படை எடுக்கின்றன. இவற்றினைக் கட்டுப்படுத்த வேண்டிய முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றார்களா? என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இந்த பயணத் தடைக் காலத்தில் தென்னிலங்கையிலிருந்து வருவதற்கு இவர்களுக்கு அனுமதியை வழங்கியது யார்? எனவும், இவ்வாறு தெற்கிலிருந்து மீனவர்கள் வரும்போது, வீதித் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் என்ன பார்த்துக் கொண்டிருந்தார்கள் எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு - கொக்கிளாய், முகத்துவாரம் பகுதியிலிருந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்காக தென்னிலங்கை மீனவர்கள் திரள் திரளாக செல்வது தொடர்பாக, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் அவர்களும் 18.07.2021 நேற்றையதினம் கொக்கிளாய் பகுதிக்கு சென்று நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டனர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் ஏறத்தாள 300 தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவக் குடும்பங்களே தமது பதிவினை மேற்கொண்டு அங்கு வசித்து வருகின்றனர்.

அவர்கள் கூட எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் அத்துமீறிக் குடியிருக்கின்றனர் என்ற தகவலை ஏற்கனவே நாம் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்.

கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தற்போது கொக்கிளாய் - புளியமுனை என்னும் இடத்தில் வசித்து வருகின்றார்கள். அவர்கள் கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டெடுக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதியில் ஏறத்தாள 300 தென்னிலங்கை மீனவக் குடும்பங்கள்தான் வசித்து வருகின்றார்கள் என்று சொல்லப்படும் நிலையில், முகத்துவாரம் பகுதியிலிருந்து ஏறத்தாள 1500 இற்கும் மேற்பட்ட படகுகள் சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்காக படையெடுத்து செல்வதை நாம் காணக்கூடியதாகவிருந்தது.
குறிப்பாக அந்தப் படகுகளிலே ஒவ்வொருவர் வீதம் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை போன்ற சட்டவிரோத தொழில்களுக்காக சென்று கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக ஆயிரத்து ஐந்நூறு பேருக்கு மேல் படகுகளில் செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இதன் பின்னர் இவ்வாறு கடலுக்குள் போனவர்கள் அங்கு சட்டவிரோத தொழில்களின் மூலம் அதிக மீன்களைப் பிடித்ததும், கடலில் இருந்து கரையில் இருக்கும் தெற்கைச் சேர்ந்த தமது சகாக்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்துவார்கள். 

இவ்வாறு அழைப்பினை ஏற்படுத்தியவுடன் கரையில் இருப்பவர்கள் சுருக்கு வலைகளுடன் கடலுக்குள் செல்வார்கள். அவ்வாறு கிட்டத்தட்ட 300 ற்கும் மேற்பட்ட தெற்கைச் சேர்ந்த படகுகள் இரண்டாவது தடவையாகவும், கடலுக்குள் செல்வதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இரண்டாவது தடவையில் செல்லும் 300 க்கும் மேற்பட்ட படகுகளில், ஒவ்வொரு படகுகளிலும் நான்கு தொடக்கம் ஆறு வரையான நபர்கள் கடலை நோக்கிச் செல்வதாகவும், அவர்களும் அங்கு சென்று சட்டவிரோத டைனமெற் அடித்து, சுருக்கு வலைகள் மூலமாக மீன்களை அள்ளி வருவதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக முதல் தடவையில் மாத்திரம், 1500 ற்கும் மேற்பட்ட தெற்கைச் சார்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றார்கள் என்பதுடன், இதன் பின்னர் 300 இற்கும் மேற்பட்ட படகுகளில், படகு ஒன்றில் தலா நான்கு தொடக்கம் ஆறு வரையான தெற்கைச் சார்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றனர் எனில் இவ்வளவு தெற்கைச் சேர்ந்த மீனவர்களும் எப்படி இங்கே கொக்கிளாய் முகத்துவாரம் பகுதிக்கு வந்தார்கள்?

தற்போது அரசாங்கத்தினால் பல கட்டுப்பாடுகள் இங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலே, பயணத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாகாணத்திற்கு மாகாணம் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இவர்கள் எவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதிக்கு வந்தார்கள்.

இந்த தெற்கைச் சேர்ந்த மீனவர்கள் தமது சட்டவிரோத தொழில்கள் மூலம், முல்லைத்தீவில் இருக்கும் பாரிய கடல் வளத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுடைய வாடிகளுக்கு அருகிலேயே கடற்படை முகாம் ஒன்று அமைந்திருக்கின்றது. அவ்வாறு கடற்படைத் தளம் இருக்கத்தக்கதாகவே தெற்கைச் சேரந்தவர்கள் இவ்வாறு கடலுக்குள் அணிதிரண்டு செல்வதுடன், சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

அதேவேளை சில சந்தர்ப்பங்களில் கடற்படையினர் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் தெற்கைச் சேர்ந்த மீனவர்களின் ஓரிரு படகுகளைக் கைது செய்தாலும் இலஞ்சங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவிப்பதாக இங்குள்ள மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டிற்காக தெற்கைச் சேர்ந்தவர்கள் திரள் திரளாக படகுகளில் செல்வதை நாம் நேரடியாகச் சென்று பார்வையிட முடிந்துள்ளது.

கிட்டத்தட்ட 72 கிலோ மீற்றர் தூரமான எமது முல்லைத்தீவு கடற்கரையோரத்தில், கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டி வரையில் கடற்றொழில் செய்யும் எமது தமிழ் மீனவர்கள் இப்படியான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைச் செய்யவில்லை.

குறிப்பாக எமது தமிழ் மீனவர்கள் சிறு தொழில்களையும், தமது படகுகள் மூலமாக ஒரு ஒழுங்கான கட்டமைப்புடன் கூடிய தொழில்களைத்தான் அவர்கள் செய்துவருகின்றனர்.

இப்படியிருக்கும்போது தென்னிலங்கை மீனவர்கள் அனுமதிகளைப் பெற்றோ அல்லது அனுமதிகளைப் பெறாமலோ அவர்கள் இங்கு வந்து, பாரிய அளவில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த விடயத்தில் கூடுதல் கவனஞ் செலுத்த வேண்டிய முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத தொழில்களைக் கட்டுப்படுத்தாது, திணைக்களங்களில் இருந்தபடியே தூங்கிக் கொண்டிருக்கின்றனரா?
இந்த அரசினுடைய பிரதிநிதிகள் எங்கே? கடற்றொழில் அமைச்சர் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்? கடற்படையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

அத்தோடு இந்த பயணத் தடைக்காலங்களில் தெற்கிலிருந்து இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்திற்கு வருவதற்கு இவர்களுக்கு அனுமதியை வழங்கியது யார்?

இவ்வாறு தெற்கிலிருந்து மீனவர்கள் வரும்போது, வீதித் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் என்ன பார்த்துக் கொண்டிருநதார்கள்? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

எங்களுடைய முல்லைத்தீவுக் கடலின் பாரிய கடல் வளம் தெற்கைச் சேர்ந்த மீனவர்களின் சட்டவிரோத தொழில்களால் கொள்ளையடிக்கப்படுகின்றது. இதனால் எமது முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழ் மீனவர்களே பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக இவ்வாறு மாலை வேளைகளில் 1500 இற்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்களின் படகுகள் கடலை நோக்கிச் செல்லும்போது, தமிழ் மீனவர்களால் பாரம்பரிய கரைவலைத் தொழிலில் கூட ஈடுபட முடியாத நிலை ஏற்படுகின்றது. மீன்கள் கடலின் நடுப்பகுதியிலிருந்து கரவலைப் பாடுகளுக்கு வருவதற்குகூட சந்தரப்பம் இல்லை.

இதைவிட கரைவலை வளைப்பதற்கு சந்தர்ப்பத்தினை வழங்காமல் இவர்களின் அட்டகாசங்கள் தொடர்கின்றன. கரைவலைத் தொழில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் தெற்கைச் சேர்ந்த சட்டவிரோத தொழிலில் ஈடுபவர்களால் மிரட்டப்படுவதாகவும் அங்குள்ள தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக கடற்றொழில் திணைக்களமோ, அல்லது இதற்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சரோ உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad