போராட்டம் நடாத்தியதாக துமிந்த நாகமுவ, மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பலர் கைது : ஒரு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறும் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

போராட்டம் நடாத்தியதாக துமிந்த நாகமுவ, மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பலர் கைது : ஒரு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறும் உத்தரவு

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் வைத்து முன்னணி சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 5 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கொழும்பு கோட்டை நிதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, முத்துராஜவலவில் முன்மொழியப்பட்ட எல்.என்.ஜி திட்ட மின் உற்பத்தி நிலைய நிர்மாணத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஜேவிபி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி போராட்டங்களில் ஈடுபட்டமை அதனை ஒழுங்கு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் 9 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்றிணைந்த பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தினால், கூட்டுத்தாபனத்தின் வளாகத்தின் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் முன்னணி சோசலிச கட்சியின் (FSP) பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவும் கலந்து கொண்டிருந்தார். இதன்போதே அவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை முத்துராஜவலாவில் முன்மொழியப்பட்ட LNG திட்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஜேவிபி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை போப்பிட்டியா சந்திப்பில் போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து பமுனுகம பொலிஸார் பெற்றுக் கொண்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பமுனுகம பொலிஸ் பிரதேசத்தில் போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர்களுக்கு சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஜா-எலவில் போராட்டம் நடத்த முயன்றபோது, பமுனுகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே அமைதியற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவுக்கமைய, பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகள், மறு அறிவித்தல் வரை மேற்கொள்ளக்கூடாது என, பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பொது வெளியில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதாக, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜேவிபி ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன உள்ளிட்ட ஐவரும் வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தனது கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில், பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க, உடல் பிடித்து விடல் நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment