அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு திங்கள் முதல் தடுப்பூசி : வயதெல்லை கிடையாது, நேரம், திகதி அறிவிக்கப்படும் : முதற் கட்டமாக 100 இற்கு குறைவான மாணவர்களைக் கொண்ட 2,996 பாடசாலைகள் திறக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு திங்கள் முதல் தடுப்பூசி : வயதெல்லை கிடையாது, நேரம், திகதி அறிவிக்கப்படும் : முதற் கட்டமாக 100 இற்கு குறைவான மாணவர்களைக் கொண்ட 2,996 பாடசாலைகள் திறக்கப்படும்

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கையில் உள்ள 10,155 பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களுக்கும் ஜூலை 12ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பிரிவெனாக்கள், அரச உதவியுடன் இடம்பெறும் பாடசாலைகளும் உள்ளடங்குமென அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (07) முற்பகல் இலங்கையிலுள்ள 9 மாகாணங்களினதும் ஆளுநர்கடன் Zoom தொடர்பாடல் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது அதிபர்களால் உதவிக் குழுவொன்று நியமிக்கப்பட்டு அந்தந்த மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படுவர். அதனைத் தொடர்ந்து அங்கு வரும் ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

அந்தந்த மத்திய நிலையங்களுக்கு ஆசிரியர்கள் வருகை தர வேண்டிய நேரம், திகதி ஆகியன முற்கூட்டியே அறிவிக்கப்படவுள்ளது.

அவர்களின் வயதெல்லை தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவித்த அவர், இந்நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் முன்னுரிமை குழுவினராக கருதப்பட்டு, பாடசாலைகளை மிக விரைவாக திறக்கும் வகையில், பிரதான நடவடிக்கையாக இத்தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் கல்வி நடவடிக்கையை மீளுயிரூட்டும் வகையிலான முதலாவது நடவடிக்கையாக இதனை கருதுவதாகவும், தொடர்ந்தும் பாடசாலைகளை மூடி வைக்க முடியாது எனவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இந்நடவடிக்கை மிக முக்கியமானது என அவர் தெரிவித்தார்.

இம்முழு நடவடிக்கையும் ஜூலை 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்குள் நிறைவு செய்யப்படுமென அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து முதற் கட்டமாக, நாட்டில் காணப்படும் 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2,996 பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

றிஸ்வான் சேகு முகைதீன்

No comments:

Post a Comment