இவ்வாண்டிலிருந்து தற்போதுவரை 1266 பேர் உயிரிழப்பு, 7177 பேர் காயம் : வாகன சாரதிகள் ஒழுக்கமாக செயற்படாத விடத்து விபத்துக்களை குறைக்க முடியாது - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன - News View

Breaking

Wednesday, July 14, 2021

இவ்வாண்டிலிருந்து தற்போதுவரை 1266 பேர் உயிரிழப்பு, 7177 பேர் காயம் : வாகன சாரதிகள் ஒழுக்கமாக செயற்படாத விடத்து விபத்துக்களை குறைக்க முடியாது - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன

(நா.தனுஜா)

இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து தற்போதுவரையான (நேற்று முன்தினம்) காலப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் 1,266 பேர் உயிரிழந்திருப்பதுடன் 7,177 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். அதேவேளை வீதிவிபத்துக்களால் நேற்று மாத்திரம் 10 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதனடிப்படையில் நோக்குகையில் வருடாந்தம் சுமார் 3,650 பேர் வரையில் உயிரிழக்கக்கூடும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சட்டங்களையும் தண்டனைகளையும் வலுப்படுத்தினாலும், வாகன சாரதிகள் உரியவாறு ஒழுக்கமாக செயற்படாத விடத்து விபத்துக்களைக் குறைக்க முடியாது என்று குற்றங்கள் மற்றும் வீதிப் போக்கு வரத்துக்குப் தொடர்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் வீதிவிபத்துக்களும் அவற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, எமது நாட்டைப் பொறுத்தவரை கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பதிவான வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவான வீழ்ச்சியொன்று காணப்படுகின்றது.

பொதுவாக சிங்கள, தமிழ் புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் ஏப்ரல் மாதத்திலும் பின்னர் வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களை அண்மித்த காலங்களிலும் அதிகளான வாகன விபத்துக்கள் பதிவாகும்.

இருப்பினும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை அடுத்து பொதுமக்கள் வாகனப் போக்குவரத்துக்களைக் கணிசமானளவிற்கு குறைத்துக் கொண்டார்கள்.

அதேபோன்று 2020 ஆம் ஆண்டிலும் சுமார் 6 மாத காலத்திற்கு நாடு முழுமையாகவும் பகுதியளவிலும் முடக்கப்பட்டிருந்தது. எனவே அவ்வாண்டுகளில் பதிவான வாகன விபத்துக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவொன்றை எட்டுவது மிகவும் கடினமான விடயமாகும்.

பொதுவாக நோக்குமிடத்து கடந்த 2011 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் பதிவாகும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 35,000 - 40,000 வரையான மட்டத்தில் காணப்பட்டுள்ளது. எனினும் இவை பொலிஸ் நிலையத்தில் பதிவாகும் விபத்துக்களின் எண்ணிக்கை மாத்திரமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே நாட்டில் இடம்பெறும் வாகன விபத்துக்களின் மொத்த எண்ணிக்கை 40,000 இற்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது என்று கூறிவிட முடியாது.

காப்புறுதி நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை சுமார் 5 இலட்சமாகும்.

அவற்றில் 35,000 - 40,000 வரையான விபத்துக்கள் மாத்திரம் பொலிஸில் பதிவு செய்யப்படுவதுடன் ஏனைய விபத்துக்களின்போது நேரடியாகக் காப்புறுதி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, அதனாலேற்பட்ட நட்டம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 2,839 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று 2020 ஆம் ஆண்டில் பதிவான வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 2,144 ஆகும். இவ்விரு வருடங்களிலும் முறையே உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் ஆகியவற்றின் காரணமாக வீதிப் போக்குவரத்து கணிசமானளவு குறைவடைந்திருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

2020 ஆம் ஆண்டில் நாடு முடக்கப்படாமல் இருந்திருப்பின், அவ்வாண்டில் பதிவான வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 3,000 ஐக் கடந்திருக்கும். அதேபோன்று இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து தற்போது வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 1266 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள்.

அத்தோடு இக்காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7,177 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். அவர்களில் எம்மைப்போன்று இயல்பாக இருந்த குறிப்பிடத்தக்களவானோர் தற்போது அவர்களது வாழ்நாள் முழுவதையும் சக்கர நாற்காலியிலேயே கடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இவ்வாறான வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதென்பது வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருக்கும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளருக்கும் மாத்திரம் உரிய கடப்பாடு அல்ல. மாறாக இவ்விடயத்தில் அனைத்து வகையான வாகனங்களின் சாரதிகளுக்கும் சமளவான பொறுப்பு இருக்கின்றது.

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் துப்பாக்கிச் சூடு, வாள் வெட்டு போன்ற தீவிரவாதத் தாக்குதல்களால் நாளொன்றுக்கு சுமார் 10 பேர் வரையில் உயிரிழந்தார்கள். அதேபோன்று இப்போது வாகன விபத்துக்களால் நாளொன்றில் சுமார் 10 பேர் மரணமடைகின்றார்கள்.

நேற்று மாத்திரம் பதிவான தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் வாகன விபத்துக்களில் சுமார் 10 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதனை மையப்படுத்திய கணிப்பின்படி வருடாந்தம் 3,650 பேர் உயிரிழக்கக்கூடும்.

எனவே வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காக சட்டங்களையும் தண்டனைகளையும் வலுப்படுத்தினாலும், வாகன சாரதிகள் உரியவாறு ஒழுக்கமாக செயற்படாத விடத்து விபத்துக்களைக் குறைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad