124 வருடங்களுக்கு முன்பிருந்தே உள்ளூராட்சி சபையை கொண்டிருந்த சாய்ந்தமருது நகர சபை மலர்ந்தே ஆக வேண்டும் : பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

124 வருடங்களுக்கு முன்பிருந்தே உள்ளூராட்சி சபையை கொண்டிருந்த சாய்ந்தமருது நகர சபை மலர்ந்தே ஆக வேண்டும் : பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம்

நூருல் ஹுதா உமர்

124 வருடங்கள் பழமையான சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை பெறுவதற்கு போராடிய முன்னிலை போராளி மர்ஹும் வை.எம். ஹனீபா அவர்கள் மறைந்து 100 நாட்கள் கடந்துவிட்டது, இந்நிலையில் அவருக்காக பிரார்த்திக்கும் அதேவேளை அவரதும், எமதும் நோக்கம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது கவலையான விடயம் என சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியும், இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.எல்.எம். சலீம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், சாய்ந்தமருது பிரதேசம் இற்றைக்கு 124 வருடங்களுக்கு முன்பிருந்தே உள்ளூராட்சி சபையை கொண்டிருந்த விடயம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு வரலாற்றுத் தடயமாக காணப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக இருக்கும் இக்கால கட்டத்தில், அதற்கான பல ஆய்வுகள் மற்றும் அதற்கு முன்னோடியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சாய்ந்தமருது பிரதேசம் ஒரு வரலாற்று பூர்வீகம் கொண்டது என்பது பல ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

டச்சுக் கம்பனித் தூதுவர் ஜோரிஷ் ஸ்பில் பேகனின் குழுவினர் கி.பி.1602.05.31ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் தரையிறங்கி கண்டிக்கு சென்றதாக, கொழும்பிலுள்ள டச்சு நூதனசாலை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.1630ஆம் ஆண்டில் எமன் தேசத்தில் இருந்து மதிப்புக்குரிய "அஸ்கோல் அவ்லியா" என்று அழைக்கப்பட்ட இறை நேசர் இங்கு வந்து இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ததுடன் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலையும் நிருவகித்துள்ளார்கள், அத்துடன் அன்னாரது சியாரம் இன்றும் சாய்ந்தமருது பள்ளிவாசல் முன்றலில் காணப்படுகின்றது.

கி.பி.1637ஆம் ஆண்டு ஒல்லாந்தர் சாய்நதமருது கடற்கரையை அடைந்த போது அங்கு வெண்ணிற ஆடை அணிந்த முஸ்லீம்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கி.பி.1691ஆம் ஆண்டு பெ்ரவரி 5ஆம் திகதி எழுதப்பட்ட செப்பேடு சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் இங்கு வாழ்ந்த குடியிருப்புகளின் பூர்வீகத்தை பறைசாற்றுகின்றன. கி.பி.1691ஆம் ஆண்டில் கண்டி அரசனின் " சனச" விலும் சாய்ந்தமருது குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது- மாளிகைக்காடு மொகிதீன் ஜும்மா பள்ளிவாசல் சுமார் 400 வருடங்களுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டது. மட்டுமல்லாது காரைதீவு முச்சந்தி மக்காம், பக்கீர்சேனை சியாரம் போன்றவற்றுடன் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற கிராமங்களும் ஆத்மீக ரீதியில் நிருவகிக்கபட்டது. இவ்வாறாக குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பின்னணியை கொண்ட சாய்ந்தமருது பிரதேசம் இற்றைக்கு 124 வருடங்களுக்கு முன்பிருந்தே உள்ளூராட்சி சபையை கொண்டிருந்தது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு வரலாற்றுத் தடயமாக காணப்படுகிறது.

இலங்கை பிரித்தானியரின் ஆட்சியில் இருந்த காலத்தில் மகாராணியின் பிரதிநிதியான கௌரவ ஆளுநரின் பிரகடனத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் சாய்நதமருது உட்பட 5 பிரதேசங்கள் 1897.02.19ஆம் திகதியிலிருந்து செயற்படத்தக்கதாக சானிடரி சபைகளாக குடியேற்ற செயலாளர் அவர்களினால் அரச வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டது. 1897ஆம் ஆண்டு பெ்ரவரி 19ஆம் திகதி வெளிவந்த சிலோன் அரசாங்க வர்த்தமானி, அன்றைய குடியேற்ற செயலாளர் திரு ஈ நோயல் வர்கேர் அவர்கள் பிரித்தானிய ஆளுநரின் ஆணைப்படி பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.

அப்பிரகடனத்தின் படி 1892ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க "சிறிய நகரங்கள் சானிட்டரி கட்டளைச் சட்டத்தின்" 2ஆம் பிரிவிற்கு இணங்க சனிட்டரி சபைகள் என்ற அந்தஸ்துடன் கிழக்கு மாகாணத்தின் பின்வரும் கிராமங்களான, 1. காத்தான்குடி, 2.ஏறாவூர், 3.சாய்ந்தமருது, 4.கல்முனை மற்றும் 5. சம்மாந்துறை போன்றன அன்றைய நிறைவேற்று சபையின் ஆலோசனைக்கு அமைய கௌரவ ஆளுநர் அவர்களின் செயலாளர் அவர்களினால் இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நாங்கள் பிறக்காத அறிந்திராத காலத்தில் வழங்கப்பட்ட சாய்நதமருது உள்ளூராட்சி சபையை அரசியல் காரணங்களுக்காக, சில அரசியல்வாதிகள் பின்புலத்தில் செயற்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டது. நாம் பிறந்து அறிந்த தெரிந்த காலத்தில் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க சட்டத்தைப் பயன்படுத்தி எமது பிரதேசத்தின் அரசியல் அதிகாரம் இல்லாமல் செய்யப்பட்டது மட்டுமல்லாது, இங்கு அரசியல் தலைமைக்குப் பதிலாக அரசியல் முகவர்கள் செயற்பட ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடு இன்றுவரை தொடர்கிறது. இவ்வாறு எமது தொன்மை மிக்க சபை இல்லாமல் ஆக்கப்பட்டது வரலாற்றுத் தவறு மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை மறைக்கின்ற செயற்பாடுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment