கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளதா? - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளதா?

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற செலன்திவ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் - கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளதாக தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

Selendiva Holdings நிறுவனத்தின் அசையா சொத்து அபிவிருத்தியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள, காங்கேசன்துறையிலுள்ள சர்வதேச இணைப்பு நிலையம் அமைந்துள்ள 5 ஏக்கர் பகுதி முதலீட்டுக்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தொடர்ந்தும் கடற்படையினரின் வசமுள்ள, கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் எனும் பெயரில் இலங்கை முதலீட்டு சபையின் ஏல விற்பனை மூலம் வழங்கப்படவுள்ளதாக காலைக்கதிர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் தொடர்பில் ஒரு மாதத்திற்கு முன்னர் நகர அபிவிருத்தி அதிகார சபை தகவல்களைக் கோரியதாகவும் தம்மிடம் இருந்த தகவல்களை அவர்களுக்கு வழங்கியதாகவும் தெல்லிப்பழை பிரதேச செயலகம் தெரிவித்தது.

வலிகாமம் வடக்கின் பெரும்பகுதி படையினரின் ஆக்கிரமிப்பில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் கீரிமலையில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டது.

J/226 நகுலேஸ்வரம் கிராம சேவகர் பிரிவில் சுமார் 50 ஏக்கர் நிலம் கடற்படையினர் வசமுள்ளபோதிலும் 7 ஏக்கர் நிலத்தில் குறித்த மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாகவும் காலைக்கதிர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்திய முதலீட்டில் விஸ்தரிக்கப்பட்ட பலாலி விமான நிலையத்திலிருந்து சுமார் 5.5 கிலோ மீட்டர் தொலைவிலும் கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் அமைவிடம் உள்ளது.

மக்களின் நிலத்தில் அடாத்தாக கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாளிகை வெளியாருக்கு கூறுவிலை மூலம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் சில தரப்பினர் இன்று அதிருப்தி வெளியிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad