சிறுவர்களை தாக்கும் 'மிஸ்ஸி' நோய், அச்சமடையத் தேவையில்லை, மாற்றங்கள் ஏற்படுமாயின் தாமதியாது வைத்திய ஆலோசனைகளைப் பெறவும் - விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

சிறுவர்களை தாக்கும் 'மிஸ்ஸி' நோய், அச்சமடையத் தேவையில்லை, மாற்றங்கள் ஏற்படுமாயின் தாமதியாது வைத்திய ஆலோசனைகளைப் பெறவும் - விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களை தாக்கும் 'மிஸ்ஸி' என்ற நோய் பெரும்பாலான உடற்பாகங்களை அல்லது தொகுதிகளை பாதிக்கக் கூடியதாகும். எனினும் இதுவரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களில் நூற்றுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவானோரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் நோய் தொடர்பான பணியகத்தின் செயலாளர் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.

எனவே இந்த நோய் தொடர்பில் பெற்றோர் வீண் அச்சமடையத் தேவையில்லை. ஆனால் 8 - 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுமாயின் தாமதிக்காது வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில், இலங்கையில் முதியோருடன் ஒப்பிடும் போது சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் குறைவாகவே உள்ளது. சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் காணப்படுதல் மற்றும் சமூகத்துடனான நேரடி தொடர்புகள் குறைவாகக் காணப்படுதல் என்பவையே அவர்கள் தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளாகும்.

நாட்டில் ஏற்பட்ட முதலாவது கொவிட் பரவல் அலையில் தொற்றுக்குள்ளான 14 வயதுக்கு குறைவான சிறார்களில் 55 சதவீதமானோருக்கு எவ்வித தொற்று அறிகுறிகளும் தென்படவில்லை. எனவே இரண்டு நாட்களுக்கும் மேல் தடிமன் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளான போதிலும் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிறப்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைவானோர் உள்ளிட்டோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அபாய நிலைமை ஏற்படும். எனவே அவ்வாறான சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

தற்போது இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு 'மிஸ்ஸி' என்ற நோய் ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. எனினும் கொவிட் தொற்றுக்கு உள்ளானோரில் நூற்றுக்கு ஒரு வீதத்திற்கும் குறைவானோருக்கே இந்நோய் ஏற்பட்டுள்ளது. எனவே பெற்றோர் வீண் அச்சமடையத் தேவையில்லை.

ஆனால் சிறுவர்களின் வழமையான செயற்பாடுகளில் அதாவது தொடர்ந்து நித்திரை கொள்ளல் , சோர்வு, உணவை தவிர்த்தல், வாந்தி உ;ள்ளிட்ட வழமைக்கு மாறான விடயங்களை அவதானித்தால் தாமதிக்காது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட வேண்டும். தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் சிகிச்சைகளை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad