(எம்.மனோசித்ரா)
வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை அறிந்தும் மக்கள் மத்தியில் போலியான அநாவசிய பிரசாரங்களை முன்னெடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விசனம் வெளியிட்டார்.
இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் வெளியிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
இவற்றை கொள்வனவு செய்வற்கு பொறுத்தமாக சந்தர்ப்பம் இதுவல்ல என்ற அடிப்படையில் பிரதமரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அமைச்சரவையில் இந்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவே கொள்கை ரீதியான தீர்மானமாகும்.
எனினும் இந்த கொள்கை ரீதியான தீர்மானத்துடன், அதனை அமுல்படுத்துவதற்கு சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. இவ்விவகாரத்தில் திரைசேரி, வங்கி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட 3 பிரதான விடயங்கள் தொடர்புபட்டுள்ளன. இந்த முத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்.
அதற்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டு இரு தினங்களின் பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடு எட்டப்பட்ட வாகன இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்தும் தீர்மானத்தை 48 மணித்தியாலங்களுக்குள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தது.
எனினும் இந்த விடயத்தை ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிழையாக திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் போலியான பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதன் ஊடாக மக்களின் அறிவை அவமானப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளும் பாரிய நாடகங்களையே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன என்றார்.
No comments:
Post a Comment