கிளிநொச்சி பூநகரி வலைப்பாட்டில் வாழ்விடம் பறிபோகும் என்ற அச்சம் வேண்டாம். அதற்கான தீர்வு பெற்றுக் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வலைப்பாடு மீனவர் சங்கத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அங்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிற்கு மீனவர்களால் எடுத்துக் கூறப்பட்டது.
தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய இடங்கள் பறிபோகும் என்ற அச்ச உணர்வு தமக்கு ஏற்பட்டுள்ளதாக மீனவர்களால் குறிப்பிடப்பட்டது. பாரம்பரியமாக தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்த பகுதியில் தமக்கான தொழில் அங்கீகாரத்தை வழங்குவதற்கு இழுத்தடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொழில் உரிமத்தினை பெற்றுக் கொடுப்பதில் இழுபறி நிலை காணப்படுவதாகவும் தெரிவித்த மீனவர்கள், புதியவர்களை அப்பகுதியில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயங்களை கவனத்தில் எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், அப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதாக மீனவர்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.
பூர்வீக இடம் பறிபோகும் என்ற அச்சம் வேண்டாம் எனவும், அதற்கு இடமளிக்காது பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. இதுவரை காலமும் தொழில் புரிந்த தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் தொழில் உரிமத்தினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறித்த விடயங்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு வரையுமாறும், அதன் பிரதியினை கடற்றொழில் அமைச்சர் மற்றும் தனக்கும் வழங்குமாறும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார் . தொடர்ந்து கடல் தொழிலில் ஈடுபடும் பிரதேசத்தினையும் பார்வையிட்டு கள நிலைமைகளை ஆராய்ந்தார் .
No comments:
Post a Comment