கொரோனா தொற்றாளர்களுக்கு அனைத்து வசதிகளுடனும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் மருதமுனை பிரதேச வைத்தியசாலை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

கொரோனா தொற்றாளர்களுக்கு அனைத்து வசதிகளுடனும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் மருதமுனை பிரதேச வைத்தியசாலை

மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் வழிகாட்டலில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், மாவட்ட வைத்திய அதிகாரியுமான டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ழார் மேற்படி கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக இருந்து இந்த சிகிச்சை நிலையத்தை மிகவும் சிறப்பாக வழிநடாத்தி வருகின்றார்.

இது சுகாதார அமைச்சின் கிழ் உள்ள அரசாங்க வைத்தியசாலையாகும். இப்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் பல வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் மருதமுனை வைத்தியசாலையும் ஒன்றாகும். இங்கு பெண்களுக்கான சிகிச்சையே வழங்கப்படுகின்றது.

இந்த சிகிச்சை நிலையத்தில் நூற்றுப்பத்து பேர் தங்கி சிகிச்சை பெறுவதற்கான கட்டில் மெத்தையுடன் கூடிய சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

இந்த சிகிச்சை நிலையத்திற்குத் தேவையான அனைத்து அபிவிருத்திப் பணிகளுக்காகவும் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் அனைத்தும் பூர்த்தியடைந்து சகல வசதிகளும் கொண்டதாக இவ்வைத்தியசாலை இயங்கி வருகின்றது.

இங்கு கொரோனா தொற்றாளர்களாக சிகிச்சைக்கு வருகின்றவர்களுக்கு கொரோனா சிகிச்சையுடன் ஏனைய நோய்களுக்கான சேவைகளும் வழங்கப்படுகின்றன. 

இங்கு சிகிச்சை பெறுகின்றவர்களுக்கு அதிகாலை சிற்றூண்டி வழங்கப்படுகின்றது. காலை 8.30 மணிக்கு காலை உணவு வழங்கப்படுகின்றது.மேலும் பகல் 1 மணிக்கு பகல் உணவும்,மாலை 4.30 மணிக்கு சிற்றூண்டியும், இரவு 8.30 மணிக்கு இரவு உணவும் வழங்கப்படுகின்றன.

மேலும் தொலைக் காட்சி வசதி, வைபை வசதி, விளையாடுவதற்கான விளையாட்டு உபகரண வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன் தொற்றாளர்களுடன் டொக்டர்களும்,தாதி உத்தியோகத்தர்களும் வெளியில் இருந்து உரையாடுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதுடன், தொற்றார்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளன. 

இவ்வாறு தொற்றாளர்கள் மிகவும் கவனமாக பராமரிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் இந்த சிகிச்சை நிலையத்தில் இதுவரை 996 தொற்றாளர்கள் சிகிச்சைக்கு வந்து 910 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 85 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 2021-06-01ஆம் திகதி 63 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் பல்வெறுபட்ட அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளைக் கழுவுதல் போன்வற்றைப் கடைப்பிடிக்கும் போதும் கொரோனா தொற்று பரவுவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.

எனவே மக்கள் சுகாதாரப் பிரிவினர்களின் அறிவுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு கைகளைக் கழுவுதல்,சமூக இடைவெளியைப் பேணுதல்,முகக்கவசம் அணிதல்,தேவையற்ற வகையில் வெளியில் செல்லாமல் இருத்தல் போன்ற விடையங்களைக் கடைப்பிடித்து வீட்டில் இருப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும்.

முன்பு இந்த வைத்தியசாலைக்கு தினமும் வெளிநொயாளர் பிரிவுக்கு இருநூற்றுக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்தனர். அதே போன்று மாதாந்த கிளினிக் சேவைக்கு தொற்றா நோயாளர் ஆயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தங்கி சிகிச்சை பெறுவதற்கும் பலர் வருகை தந்தனர். 

இவ்வாறான நோயாளர்களுக்கு மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் சேவைகள் தற்காலிகமாக மருதமுனை காரியப்பர் வீதியில் உள்ள சிறிய சகாதார மத்திய நிலையக் கட்டத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 2020-12-09ஆம் திகதி முதல் இயங்கி வருகின்றது.

பி.எம்.எம்.ஏ.காதர்
(மருதமுனை நிருபர்)

No comments:

Post a Comment