இப்போதைக்கு எரிபொருள் விலை குறையாது, தனியார் வாகன பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள், வெறுமனே விமர்சிக்காமல் தீர்வையும் முன்வைக்க வேண்டும் - அமைச்சர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

இப்போதைக்கு எரிபொருள் விலை குறையாது, தனியார் வாகன பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள், வெறுமனே விமர்சிக்காமல் தீர்வையும் முன்வைக்க வேண்டும் - அமைச்சர் உதய கம்மன்பில

(ஆர்.யசி)

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலையை அதிகரித்தால் மட்டுமே எம்மால் ஓரளவேனும் சமாளிக்க முடியும். ஆகவே இப்போதைக்கு எரிபொருள் விலை குறையாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடியில் இருந்து மீளும் வரையில் தனியார் வாகன பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறும் மக்களிடம் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் விலை நிர்ணய நிதியமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நான் அமைச்சராக முன்னர் முன்வைக்கப்பட்டது. அதேபோல் கச்சாய் எண்ணெய் விலை குறையும் வேளையில் இந்த நிதியத்தில் பணத்தை சேகரிக்கவும், விலை அதிகரிக்கும் வேளையில் நட்டத்தை நிதியம் தாங்கிக் கொண்டு கையாளவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இது தீர்மானமாக மட்டுமே இருந்ததே தவிர நடைமுறைக்கு வரவில்லை. காரணம் என்னவெனில் கொவிட் நிலைமைகளில் சகல விதத்திலும் அரசாங்கம் நட்டத்தை சந்தித்தது. பி.சி.ஆர் மேற்கொள்ளவும், மக்களுக்கு நிவாரணம் கொடுக்க நேர்ந்தது. இதற்கான பணத்தை எண்ணெய் விலை குறைப்பில் எமக்கு கிடைத்த இலாபத்தில் பயன்படுத்திக் கொண்டோம்.

கச்சாய் எண்ணெய் விலை குறைப்பின் காரணமாக எமக்கு கிடைத்த வருமானமானது செயற்பாட்டு வருமானமாகும். இதன் மூலமாக 2020 ஆம் ஆண்டு இலாபமானது 237 கோடியாகும். ஆனால் இதுவரையில் நாம் எதிர்கொள்ளும் நட்டமானது 38 ஆயிரத்து 800 கோடி ரூபாவாகும். இவ்வளவு நட்டத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இயங்கிக் கொண்டுள்ள நிலையில் 237 கோடி ரூபா இலாபத்தை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது. 

எரிபொருள் கொள்வனவு என்பது அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய கொள்வனவாகும். இதில் அமைச்சர் நேரடியாக தொடர்புபட மாட்டார். விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை ஜனாதிபதியே நியமிப்பார். மத்திய வங்கி மற்றும் திறைசேரி உறுப்பினர்களும் உள்ளனர். அவர்கள் எடுக்கும் தீர்மானமே இறுதியானது.

மேலும் நாட்டின் தற்போதுள்ள வாழ்வாதார நெருக்கடியில் எரிபொருள் விலை உயர்வு தாக்கத்தை செலுத்தும் என்பது உண்மையே. வாழ்வாதார குழுவின் போது ஆழமாக ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. டொலருக்கான பெறுமதி அதிகரித்தால் அது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் தாக்கும்.

எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டால் அது முழுமையான வாழ்வாதாரத்தை பாதிக்காது மாறாக சிறிய அளவிலான நெருக்கடி நிலைமை மட்டுமே உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்தோம். 

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என விமர்சிக்கும் நபர்கள் அதற்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். வெறுமனே விமர்சனத்தை மாத்திரம் முன்வைக்க முடியாது.

மக்கள் முடிந்தளவு தமது வாகனங்களை அனாவசியமாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள், அத்தியாவசிய சேவைகள் இயங்கட்டும், ஆனால் தனியார் வாகனங்களின் பயன்பாட்டை முடிந்தளவு குறையுங்கள். பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நெருக்கடியில் நாம் உள்ளோம்.

ஆகவே நேரடியாக மக்களுக்கு உண்மையை நான் கூறி நிலைமையை தெளிவுபடுத்தவே விரும்புகிறேன். அதுமட்டுமல்ல கச்சாய் எண்ணெய் வாங்க எம்மிடத்தில் பணம் இல்லை, தவனைக் கொடுப்பனவுகளில் நாம் இன்றும் பெற்றுக்கொண்டுள்ளோம். திறைசேரியிலும் பணம் இல்லை. இதுவே எமது உண்மையான நிலைமையாகும் என்றார்.

No comments:

Post a Comment