பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சூழலியல் சேதத்திற்கு உரிய அமைச்சரும், அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் - கடுமையாக சாடியுள்ள விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சூழலியல் சேதத்திற்கு உரிய அமைச்சரும், அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் - கடுமையாக சாடியுள்ள விஜித ஹேரத்

(நா.தனுஜா)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும்கூட, அக்கப்பலில் என்னென்ன பொருட்கள் காணப்பட்டன என்பது பற்றிய தகவல்களை அரசாங்கம் இன்னமும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. பணத்தினால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல வருட காலத்திற்கு நீடிக்கவுள்ள இந்த பாரிய சூழலியல் சேதத்திற்கு உரிய அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் மிகப்பாரிய சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் அவர்களது அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்தக் கப்பல் இலங்கைத் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்னர், அராபியக் கடற்பரப்பில் வைத்து அக்கப்பலில் இரசாயனக் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதன் காரணமாக இரசாயனக் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான இரு துறைமுகங்களிடம் அக்கப்பலினால் உதவி கோரப்பட்டது. எனினும் அந்தத் துறைமுகங்கள் குறித்த கோரிக்கையை நிராகரித்து விட்டன. அத்தகைய கப்பலையே இலங்கைத் துறைமுகம் உள்நுழைய அனுமதித்துப் பொறுப்பேற்றுக் கொண்டது.

சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாக குறித்த தகவல்கள் தமக்கு வழங்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. இந்தக் கருத்து ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்.

ஏனெனில் எமது நாட்டுக் கடற்பரப்பிற்குள் ஏதேனுமொரு கப்பல் உள்நுழையும் போது, அந்தக் கப்பல் தொடர்பான அனைத்து விபரங்களும் கப்பல் நிறுவனத்தினால் உரிய தரப்பினருக்கு வழங்கி வைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளாமல் இவ்வாறு பாரிய நாசத்தை ஏற்படுத்தக் கூடிய கப்பலை துறைமுகத்திற்குள் உள்நுழைய அனுமதிப்பது பாரிய குற்றமாகும்.

இது தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரியவாறு கவனம் செலுத்தப்படாமையை வெளிப்படுத்துவதுடன் இதனையும் விடப் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பேற்படுத்தப்படக்கூடும்.

சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே கப்பல் நிறுவனம் இயங்க வேண்டும். அவ்வாறு இயங்காவிட்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு உரிய அமைச்சருக்கு உள்ளது. ஆனால் தற்போது தப்பித்துக் கொள்வதற்காகத் தமக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர்கள் பதிலளிக்கின்றார்கள்.

குறித்த கப்பலில் பெருமளவான இரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. எமது நாட்டிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது, அங்கு அவை இரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

அதேபோன்று இந்த இரசாயனப் பொருட்கள் பெண்களின் சரீரத்திற்குள் கலந்தால், கருக்கலைக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

இந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும்கூட, அக்கப்பலில் என்னென்ன பொருட்கள் காணப்பட்டன என்பது பற்றிய தகவல்களை அரசாங்கம் இன்னமும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.

இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. வளிமண்டலம் மற்றும் கடற்பிராந்தியம் வெப்பமடைதல், அமில மழை பொழிதல் உள்ளடங்கலாக பல்வேறு பாதிப்புக்களைத் தடுப்பதில் அரசாங்கம் முழுமையாகத் தோல்வி கண்டிருக்கிறது. தீப்பரவல் ஏற்பட்ட கப்பலைத் தற்போது ஆழ்கடலுக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அதனால் பயன்கள் எவையுமில்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இத்தகையதாகவே இருக்கின்றன. கொவிட்-19 பரவலின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழுவொன்றினால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அதற்கேற்றவாறு அரசாங்கத்தினால் உடனடி நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாகத் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்றுதான் இந்தக் கப்பல் விவகாரத்திலும் அரசாங்கம் பொறுப்பின்றி செயற்பட்டுள்ளது. இதனூடாக எமது நாடு டொலர்களில் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சில அமைச்சர்கள் கூறுகின்றார்கள்.

அதேபோன்று காற்றுடன் இந்தக் கழிவுகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு விடும் என்று இராஜாங்க அமைச்சரொருவர் கூறுகின்றார். பணத்தினால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களையே கூறி வருகின்றது.

மேலும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து கடற்பிராந்தியம் வெகுவாக மாசடைந்துள்ளது. இதனால் மீனவ சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்து, அதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரும் அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு வெறுமனே 5000 ரூபாவை வழங்குவதன் ஊடாக மாத்திரம் அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது. அத்தோடு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிகோரும்போது உரிய தகவல்களை மறைத்த கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் கடப்பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது. பல வருட காலத்திற்கு நீடிக்கவுள்ள இந்த பாரிய சேதத்திற்கு உரிய அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment