(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆகஸ்ட் மாதம் ஆகும்போது 6 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இலங்கையில் கொவிட் கட்டுப்படுத்தும் தடுப்பூசி உற்பத்தி செய்தல் தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள், தேவையான சட்ட ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட வேண்டிய முறைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நீதி அமைச்சில் இடம்பெற்றது.
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம் மற்றும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் என்பவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
கொவிட் தடுப்பூசி உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆகஸ்ட் மாதம் ஆகும்போது 6 மில்லியன் தடுப்பூசிகளையும் செப்டம்பர் மாதமாகும் போது 7 மில்லியன் வரையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.
மேலும், எமக்கு தேவையான தடுப்பூசிகளின் இலக்கை பூர்த்திசெய்து கொள்ள முடியுமானால், செப்டம்பர் மாதம் இறுதியாகும்போது, நாட்டின் சனத் தொகையில் குறிப்பிடத்தக்களவானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றலாம்.
அதனால் எமது திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொண்டால், நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த பாரிய உதவியாக அமையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment