ரணிலின் பெயர் இன்னும் சில தினங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் - ஆசு மாரசிங்க - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

ரணிலின் பெயர் இன்னும் சில தினங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் - ஆசு மாரசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்வார். அவரது பெயர் இன்னும் சில தினங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் மாத்திரமே கிடைக்கப் பெற்றது. அந்த ஆசனத்துக்கு யாரை பெயரிடுவதென்ற கலந்துரையாடல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது. இன்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதும் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது செயற்குழுவில் கலந்துகொண்ட அனைவரும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலையில் பாராளுமன்றத்துக்கு ரணில் விக்ரமசிங்க செல்வதே பொருத்தம் என ஏகமனதாக தெரிவித்து, அதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றோம்.

எனவே, தலைவர் ரணில் விக்ரமசிங்க எப்போது பாராளுமன்றம் செல்வார் என்ற திகதியை கட்சிக்கு விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கின்றோம். அதன் பிரகாரம் இன்னும் சில தினங்களில் கட்சியின் செயலாளர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பார் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad