நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ள சர்வதேச சட்ட வல்லுனர்களை நாடுவதற்கு முயற்சித்து வருகின்றோம் - அமைச்சர் ரோஹித - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ள சர்வதேச சட்ட வல்லுனர்களை நாடுவதற்கு முயற்சித்து வருகின்றோம் - அமைச்சர் ரோஹித

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் விபத்தினால் சூழலுக்கும், மீனவர் சமூகத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்வது குறித்து சர்வதேச சட்ட வல்லுனர்களை நாடுவதற்கு முயற்சித்து வருவதாகவும், தேசிய மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளை ஆராய்வதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட கொவிட்-19 வைரஸ் பரவல் அவசரகால நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த நிலைமை என்னவென்பது முழு நாட்டுக்கும் தெரியும், இதனால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நஷ்ட ஈடு பெற்றுக் கொள்வது குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். நேற்றும் (நேற்றுமுன்தினம்) நீதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருடன் நட்டஈடு பெற்றுக் கொள்ளும் வழிமுறை குறித்து பேசியிருந்தோம்.

பகுதி பகுதியாகவே இதற்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்ள முடியும். இதில் முதலில் கடல் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கே நட்ட ஈட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் சமுத்திர மாசு, வளிமண்டல மாசு குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

மீனவ மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எம்மால் கால எல்லையொன்றை கணிக்க முடியாதுள்ளது. எனவே இதற்காக ஐந்து குழுக்களை நியமிக்க தீர்மானித்துள்ளோம்.

மீனவ சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பென எடுத்துக் கொண்டால், 23 குழுக்களாக இதனை பிரிக்க முடியும். இறுதியாக கருவாடு காயவைக்கும் நபரும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். 

ஆகவே இந்த சகல விடயங்களையும் கருத்தில் கொண்டால் அனர்த்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட சமூகத்திற்கே முதலில் நட்டஈடு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதேபோல் கப்பல் தீப்பிடிக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்து அதனை கட்டுப்படுத்த முயற்சித்த இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, மீப்பா நிறுவனம் ஆகியவையும் அவர்களின் பணிக்கான நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் எமது கடல் பரப்பு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காகவும் நட்டஈட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே இதற்கான சட்ட கட்டமைப்பிற்குள் தேசிய மற்றும் சர்வதேச சட்டத்துடன் எவ்வாறு ஒத்துப்போகின்றது, இதற்கு தேவையான சர்வதேச சட்ட வல்லுனர்களை பெற்றுக் கொள்ளவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கமைய எமக்கான நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வளவு கதை கூறுகின்றீர்கள், கப்பல் எவ்வாறு தீப்பிடித்தது என்பதை இன்னமும் கூறவில்லை என்றார்.

No comments:

Post a Comment