எம்மால் முடிந்தளவு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டோம், கண்ணீர் அஞ்சலிகள் தாயே...! டொக்டர் சுகுணனின் முகநூலிலிருந்து அனைவரும் ஒரு முறை வாசிக்கவும் - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

எம்மால் முடிந்தளவு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டோம், கண்ணீர் அஞ்சலிகள் தாயே...! டொக்டர் சுகுணனின் முகநூலிலிருந்து அனைவரும் ஒரு முறை வாசிக்கவும்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வீட்டில் கடந்த மே 30ஆம் திகதி இளைஞர் ஒருவர் கொவிட்-19 நோயாளியாக காணப்பட்டதை தொடர்ந்து அவர் பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தாயும் தந்தையும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

மறுநாள் தாய், தந்தையர் இருவருக்குமே கொவிட்19 நோய் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து தந்தை மகனுடன் பாலமுனை வைத்தியசாலையிலும், தாயார் மருதமுனை கொவிட் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்கள்.

63 வயதையுடைய தாயார் நீண்ட காலமாக நீரிழிவு, உயர் குருதியமுக்கம், உயர் கொழுப்பு ஆகிய நோய்களுக்காக மருந்துகளை பாவித்து வந்தவராவார். அதேவிதமான சிகிச்சைகளை தொடர்ந்து கொண்டு அவரை அவதானம் கூடிய கட்டிலில் அனுமதித்தோம்.

மறுநாள் 01.06.2021 காலையில் சாதாரணமாக எழுந்து தனது கடமைகளை செய்த அவர், நண்பகலளவில் உடம்பிற்கு முடியாதிருப்பதாகக் கூறினார். 

அவரை பரிசோதனை செய்த எமது குழுவினர் குருதியில் சீனியின் அளவு அதிகமாகக் காணப்பட்டதால் அதை குறைக்க சிகிச்சைகளை ஆரம்பித்தனர். பிற்பகலளவில் அவரின் உடல்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

பகல் உணவு, இரவு உணவுகளை சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவர் இரவு 10.30 போல் எழுந்திருந்து யோக்கட் ஒன்றும் சாப்பிட்டு விட்டு படுத்தார். இரவு 10.45 போல் மூச்செடுப்பதற்கு சிரமமாக இருப்பதாக முறையிட்டார். 

மீண்டும் முழுப் பாதுகாப்பு அங்கிகளுடன் உள்நுழைந்த மருத்துவக் குழுவினரால் நீண்ட நேரம் முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அநேகமாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ இவ்வாறாகத்தான் இருக்கும்.

இறந்தவரின் உடலை எரிப்பதற்கான சம்மதத்தை பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் இருக்கும் கணவரும் மகனும் சில உறவினர்களும் தந்தனர். தாயாரின் உடலை ஒரு தடவை காண்பிக்குமாறு அழத் தொடங்கினான் ஒரே மகன். எனக்கும் ஒருமுறை நெஞ்சு விம்மியது.

கொரோனா வைத்தியசாலையில் இருக்கும் ஒருவரை வெளியே அழைத்து வர முடியாதே! இருந்தாலும் அந்த தாயின் இறுதி நிமிடங்களில் மகனையும் கணவரையும் தவிர்த்து கொண்டு போய் எரிப்பதா? மனம் இடம் கொடுக்கவேயில்லை.

அந்த தாயின் உடலை மருதமுனை வைத்தியசாலையில் இருந்து அம்பாறை எரியூட்டிக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் கணவரதும் மகனினதும் இறுதி அஞ்சலிக்காக ஐந்து நிமிடங்கள் கொண்டு செல்லுமாறு பணித்தேன். அதற்கான ஆயத்தங்களையும் செய்தோம்.

பாதுகாப்பு வழங்கிய பொலிஸ், இராணுவத்தினரும் என் பேச்சுக்கு இசைந்தார்கள். பாலமுனையில் கணவன், மகன் இருவரினதும் அஞ்சலியை முடித்து விட்டு, முடிந்தவளவு கௌரவமாக இறுதி மரியாதை செலுத்தி அக்கினியிடம் ஐக்கியம் செய்தோம்.

ஒவ்வொருவரும் சுகாதார அறிவுரைகள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமாகும். அதனை விடுத்து ‘மதி கெட்ட மந்தைகளாக’ நடந்து கொள்ளலாகாது. அவ்வாறு நடந்து கொண்டால் தாய் தந்தையரை இழக்க நேரிடலாம்.

தயவு செய்து இது புரியாதோர் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்
(டொக்டர் சுகுணன் குணசிங்கம் அவர்களது முகநூலிலிருந்து)

No comments:

Post a Comment