தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தருணம் இதுவல்ல, ஏனைய துறைசார் ஊழியர்கள் பொலிஸ், பாதுகாப்புப் படையினரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் : ரஞ்சித் பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தருணம் இதுவல்ல, ஏனைய துறைசார் ஊழியர்கள் பொலிஸ், பாதுகாப்புப் படையினரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் : ரஞ்சித் பண்டார

(நா.தனுஜா)

தொழிற்துறை சார்ந்த உரிமைகளை வென்றெடுத்துக் கொள்வதற்கான காலமல்ல. தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தருணமும் இதுவல்ல. தற்போதைய நெருக்கடியான தருணத்தில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் மிகுந்த அர்ப்பணிப்புடனான சேவையை நாட்டிற்கு வழங்கி வருகின்றனர். நாட்டிற்கான கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏனைய துறைசார் ஊழியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது இலங்கை உள்ளடங்கலாக அனைத்து உலக நாடுகளும் சுமார் ஒரு வருட காலமாக கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. எம்மை விடவும் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடுகளும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் நாடுகளும் உள்ளன.

எனினும் எமது நாட்டைப் பொறுத்த வரையில் அனைத்து வழிகளிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொழிற்துறை சார்ந்த உரிமைகளை வென்றெடுத்துக் கொள்வதற்கான காலமல்ல. அதேபோன்று ஒவ்வொரு தொழிற்துறையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை வலுப்படுத்துவதற்கான காலமுமல்ல. தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தருணமும் இதுவல்ல. 

இந்த நெருக்கடியான தருணத்தில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் மிகுந்த அர்ப்பணிப்புடனான சேவையை நாட்டிற்கு வழங்கி வருகின்றனர். நாட்டிற்கான கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏனைய துறைசார் ஊழியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அதேவேளை இக்காலப்பகுதியில் ஊடகங்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். குறித்தவொரு செய்தியை அறிக்கையிடும்போது, அதற்கு மேலதிகமாக பல்வேறு விடயங்களைச் சேர்ப்பது அவசியமா என்று ஊடகவியலாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்கான காலம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி கடந்த காலங்களில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவசியமான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு அரசாங்கத்துடன் மோதுவதற்கான பலம் இல்லை.

அரசாங்கம் என்ற வகையில் எமது கடமைகளை திறம்பட நிறைவேற்றியிருக்கிறோம். நாட்டில் கடந்த ஒன்றரை வருட காலத்தில் பட்டினியால் எவரேனும் உயிரிழந்ததாகக் கூறமுடியாது.

சமுர்த்திப் பயனாளிகளுக்கு ஐந்தாவது தடவையாகவும் 5000 ரூபா சமுர்த்திக் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுப்பதற்காக 7.7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 52,130 குடும்பங்களுக்கும் கம்பஹா மாவட்டத்தில் 126,055 குடும்பங்களுக்கும் சமுர்த்திக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் சமுர்த்திப் பயனாளிகள், வணிக நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்க முடியாத நிலையிலிருந்தவர்கள் உள்ளடங்கலாக உதவிகோரிய அனைவருக்கும் நிதியுதவிகளை வழங்கியிருக்கிறோம்.

நிதி நெருக்கடியை எதிர்நோக்கிய வணிகங்களுக்கு உதவும் நோக்கில் 4 சதவீத வட்டிக்கு கடனுதவி வழங்குவதற்காக மத்திய வங்கியினால் 152 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

No comments:

Post a Comment