டுவிட்டருக்கு எதிரான தடை - நைஜீரியாவில் கால்பதிக்கும் ‘கூ’ செயலி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

டுவிட்டருக்கு எதிரான தடை - நைஜீரியாவில் கால்பதிக்கும் ‘கூ’ செயலி

டுவிட்டருக்கு எதிரான தடையை அடுத்து நைஜீரியாவில் கால்பதிக்கும் ‘கூ’ செயலி. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, கூ செயலி இதுவரை 3.4 கோடி டொலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளது.

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் 1967 முதல் 70 வரை நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி ஜனாதிபதி முகமது புஹாரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி இந்த பதிவை டுவிட்டர் நீக்கியது. 

ஜனாதிபதியின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டுவிட்டருக்கு காலவரம்பற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் டுவிட்டரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தள நிறுவனமான கூ, நைஜீரியாவில் கால்பதித்து, டுவிட்டர் போன்ற தகவல் தொடர்பு சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக கூ செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘கூ இந்தியா செயலியை இப்போது நைஜீரியாவில் பயன்படுத்தலாம். அங்குள்ள உள்ளூர் மொழிகளிலும் சேவையை வழங்குவது குறித்து நாங்கள் யோசித்து வருகிறோம்’ என அவர் கூறியிருந்தார். அவரது பதிவைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

டுவிட்டர் போன்ற தோற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் கூ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவன முன்னாள் மாணவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா ஆகியோரால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு, டுவிட்டருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, கூ செயலி இதுவரை 3.4 கோடி டொலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளது. தற்போது எத்தனை பயனர்களைக் கொண்டுள்ளது என்பதை வெளியிடவில்லை. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 கோடி பயனர்களின் ஆதரவை பெறுவதில் கவனம் செலுத்துகிறது.

No comments:

Post a Comment