(ஆர்.யசி)
கொவிட்-19 வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் பெற்று கட்டுப்பாட்டை மீறிய நிலையொன்று காணப்படுகின்ற போதிலும், இன்னமும் இதனை கொத்தணிகளுக்குள் முடக்கவே கொவிட் செயலணி முயற்சிக்கின்றது. தற்போதுள்ள நிலையில் 70 வீதமானோருக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றினால் மாத்திரமே சமூக பரவலில் இருந்து விடுபட முடியுமென இலங்கையின் சிரேஷ்ட வைரஸ் ஆய்வுகள் தொடர்பான நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைரஸ் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
நாட்டை முழுமையாக முடக்கி மக்களின் அனாவசிய செயற்பாடுகளை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றார்.
கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்து செயலணிக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற நிலையில் வைரஸ் பரவல்கள் தொடர்பிலான விசேட நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வினவியபோதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் பரவல் சமூக பரவலாகி இன்று மிக மோசமான நிலையொன்றில் உள்ளது, ஆனால் கொவிட்-19 வைரஸ் பரவலை கையாளும் செயலணி தொடர்ச்சியாக பொய்களை கூறி வருகின்றது.
சமூக பரவலாகியுள்ள நிலையில் கொத்தணிகளுக்குள் இதனை அடக்கிவிட முடியாது. இதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சுகாதார நிபுணர்களும், வைத்தியர்களும், சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே போன்றவர்களும் எனது கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அதனை மறுக்கின்றனர்.
உண்மையை கூறுவதென்றால் ஆரம்பத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்படவில்லை. அல்லது கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளது. சுகாதார அமைச்சர் இந்த நிலைமைகளை கையாள்வதில் பலவீனம் கண்டுள்ளார், எனினும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நிலைமைகளை சரியாக விளங்கிக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, நான் வைரஸ் தொடர்பான நிபுணர் என்பது தெரிந்தும் என்னை இந்த வேலைத்திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என நினைக்கின்றேன்.
எவ்வாறு இருப்பினும் இவை விமர்சித்துக் கொண்டு இருக்க வேண்டிய காரணியல்ல, தொடர்ச்சியாக முடக்கமொன்று இருக்க வேண்டும், மக்களை முழுமையாக சுகாதார வழிமுறைகளின் கீழ் கொண்டுவர வேண்டும், மக்களின் அனாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படும்.
வைரஸ் பரவலை எம்மால் இலகுவாக கட்டுப்படுத்த வாய்ப்புகள் இருந்தன. உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பத்தில் எமக்கு கொடுத்த 20 வீதமான தடுப்பூசிகளை அவசியமான நபர்களுக்கு கொடுத்திருந்தால், நிச்சயமாக இந்த பரவலை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 70 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றியிருக்க வேண்டும். இப்போது வழங்கப்படுவதைபோன்று ஒரு சிறிய தொகையை வைத்துக் கொண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது.
அதுமட்டுமல்ல இந்த வைரஸ் சகலருக்கும் புதியதாகும், ஆகவே பரிசோதனைகளை விரைவுபடுத்தி சரியான விதத்தில் கையாள வேண்டும். எவ்வாறு இருப்பினும் தடுப்பூசி மூலமாக எந்தவொரு மோசமான விளைவுகளும் ஏற்படாது என்பதை உறுதியாக கூற முடியும்.
சிலர் பொய்யான பிரசாரங்களை செய்கின்றனர். ஆனால் முறையான ஆய்வுகளின் பின்னரே தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும். அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment