கம்பஹா மாவட்ட மக்கள் அடிக்கடி வெள்ளத்தினால் பாதிப்புறும் தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை திங்களன்று சமர்ப்பிக்கப்படும் - நிமல் லன்சா - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

கம்பஹா மாவட்ட மக்கள் அடிக்கடி வெள்ளத்தினால் பாதிப்புறும் தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை திங்களன்று சமர்ப்பிக்கப்படும் - நிமல் லன்சா

(எம்.மனோசித்ரா)

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு துரிதமாக தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாவட்ட மக்கள் அடிக்கடி வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்படுவதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை திங்களன்று நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் பிரதேசங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த போதே இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இதனைத் தெரிவித்தார்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்பது மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படுபவையாகும். இவற்றை முன்னெடுக்கும் போது மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படும்.

அண்மையில் நிலவிய மழையுடனான காலநிலையின் போது கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படக் காரணம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையே ஆகும் என்று மக்களால் குற்றஞ்சுமத்தப்பட்டது.

அதற்கமைய இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். குறித்த ஆய்வறிக்கை எதிர்வரும் திங்களன்று அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படக் காரணம் நீர் வழிந்தோடக் கூடிய வீதி மற்றும் அதனை அண்மித்த கால்வாய் என்பன தூய்மைதப்படுத்தப்பட்டு முறையாக பேணப்படாமையாகும்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தின் போது சேவைகளை வழங்குவதற்காக கட்டப்பட்ட சில தற்காலிக சாலைகள் முறையான வடிகால் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன என்பதும் இதற்கான காரணம் என்று தெரியவந்தது.

எனவே மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட சேவை இணைப்பு வீதிகள் அகற்றப்படும் என்பதால் கம்பஹா மாவட்டத்திலுள்ள பிரதேசங்கள் எதிர்காலத்தில் நீரில் மூழ்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

மேலும், நீண்ட காலமாக முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படாத கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை சுத்தம் செய்து வடிகட்டுவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தாழ்நில மேம்பாட்டு திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மதிப்பாய்வுகள் பரிசீலிக்கப்பட்டு சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் கம்பாஹா மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அவர்களை கட்டுப்படுத்தாமல் தேவைகளை நிறைவேற்றுவதாகும்.

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு துரிதமாக அதற்கான தீர்வை வழங்குவதோடு, மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்து அதனை மக்களின் பாவனைக்கு கையளிப்பதற்கும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment