ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வரவேற்போடு சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்தார் ரணில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வரவேற்போடு சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்தார் ரணில்

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கையாக கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசன வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகாெண்டார்.

சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க காலை 10.00 மணிக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சபாபீடத்துக்கு வரும் நுழைவாயில் ஊடாக வந்தார்.

சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, அவருக்கு எதிர்க்கட்சியில் முன் வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்துக்கு படைக்கல செவிதர் அழைத்து சென்றார். இதன்போது ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து மேசையில் தட்டி அவரை வரவேற்றனர்.

சத்தியப்பிரமாணம் செய்துகாெண்ட ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியை பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொண்டு, ஆளுங்கட்சியில் முன்வரிசையில் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களை பார்த்து அவர்களுக்கும் வணக்கம் செலுத்தி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்துக்கு சென்று அமர்ந்து கொண்டார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் முன்வரிசையில் 13 ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அந்த ஆசனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இருந்தார்.

தற்போது ஆசன வரிசையில் ரணில் விக்ரசிங்கவுக்கு அடுத்தபடியாக ஆர்.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த ஆசனமும் கிடைக்கவில்லை. இருந்தபோதும் அந்த கட்சிக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது. இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அந்த ஆசனத்துக்கு யாரை நியமிப்பதென்ற கலந்துரையாடல் கட்சி செயற்குழுவில் பல தடவைகள் இடம்பெற்று வந்தன.

இறுதி கட்டத்தில் நாட்டின் நிலைமைய கருத்திற்கொண்டு, தற்போதைய நிலையில் பாராளுமன்றத்துக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செல்ல வேண்டும் என்ற தீர்மானம் கட்சி செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் கடந்த வாரம் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசனத்துக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரை பரிந்துரை செய்து கட்சியின் செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் கையளித்திருந்தார்.

அதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்துக்கு வந்து சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்ற உறுப்பினரானார்.

No comments:

Post a Comment