சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், அவ்வாறான உடைகளை தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், அவ்வாறான உடைகளை தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்பு

திஸ்ஸமகாராம, திஸ்ஸவெவ வாவியில் மண் அகழ்வு பணிகளில் ஈடுபட்டவர்கள் சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் எனவும், அவர்கள் அணிந்த இராணுவ உடையை ஒத்த உருமறைப்பு (கெமோபிளக் - Camouflage) ஆடை சீன இராணுவத்தினருக்கொ அல்லது ஏதேனும் இராணுவ அமைப்புக்கோ உரித்தானது அல்ல என, சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

திஸ்ஸமகாராமவில் சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள் இராணுவத்தினர் பயன்படுத்தும் உருமறைப்பு (கெமோபிளக்) சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களினால் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திடம் வினவியபோது அதற்கு பதிலளித்த சீன தூதரகம், குறித்த தொழிலாளர்கள், சீன இராணுவத்தை சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் எனவும் அவர்கள் பயன்படுத்திய ஆடை சீன இராணுவத்துக்கோ அல்லது ஏதேனும் இராணுவ அமைப்புக்கோ சொந்தமானது அல்ல எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது எழுந்துள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு இலங்கைக்கான சீன தூதரகத்தினால் குறித்த பகுதியில் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பங்குதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் பணிகளில் ஈடுபடுகின்றபோது இந்த வகை உடைகளை அணிவதிலிருந்து தவிர்ந்து கொள்வது குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையை கொழும்பிலுள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.

(ஸாதிக் ஷிஹான்)

No comments:

Post a Comment