முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு - சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு - சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் உப்புமாவெளி பகுதியில் பாரிய சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உப்புமாவெளி பிரதேசத்தில் உள்ள ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ள பாரிய மணல் குவியல் தொடர்பாக, முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று (08) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான், மணல் அகழ்வுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, உப்புமாவெளி பகுதியில் மணல் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்றையதினம் கனிய வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் பொலிசார் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த மணல் அகழ்வுக்கான அனுமதி பெறப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரிவித்த அதிகாரிகள், யாழ்ப்பாணம் சென்று, இது தொடர்பான அறிக்கையை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்தில் சட்டவிரோதமான முறையிலேயே மண்ணகழ்வு இடம்பெற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரை பொலிசார் யாரையும் கைது செய்யவில்லை அதனைவிட குறித்த சட்டவிரோத மண்ணகழ்வு இடம்பெற்றதை ஊடகவியலாளர்களே பொலிஸாருக்கு அடையாளம் காட்டியபோதும் தொடர் நடவடிக்கைகளில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி பொலிஸாரால் மறுக்கப்படுகிறது.

உப்புமாவெளி பகுதியில் மணல் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்றையதினம் கனிய வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் பொலிசார் பார்வையிட சென்றபோது ஊடகங்கள் ஒளிப்படம் வீடியோ எடுக்க பொலிசார் தடை விதித்துள்ளனர்.

இதனால் பொலிசார் இந்த சட்டவிரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், இவ்வளவு பாரிய மணல் அகழ்வு பொலிஸாருக்கு தெரியாமல் நடந்ததா ? இதுவரை அகழ்ந்தவரை அடையாளம் கண்டு (மூன்று நாட்களில்) கைது செய்ய முடியாதா ? என பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

இதேவேளை குறித்த மணல் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை சூழ விமானப் படையினரும் பொலிசாரும் இணைந்து ட்ரோன் கமெரா மூலம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment