ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி கூட்டாக செயற்பட தீர்மானம் : ஹக்கீம், மனோ, அனுர சந்தித்து முடிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி கூட்டாக செயற்பட தீர்மானம் : ஹக்கீம், மனோ, அனுர சந்தித்து முடிவு

(எம்.மனோசித்ரா)

விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், இதன் நோக்கம் ஜனநாயகமாகவும் முற்போக்கான எண்ணத்திலும் அல்ல என்பதால் தேர்தல் முறைமை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய யோசனைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜே.வி.பி. சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேஷன், பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகுமார் மற்றும் வேலுகுமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் சார்பில் அதன் தலைவர் ரவுப் ஹக்கீம், அதன் மத்திய குழு உறுப்பினர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில், தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என்பதில் ஆர்வம் செலுத்தும் அரசாங்கத்தின் நோக்கம் முற்போக்கானதும் ஜனநாயக ரீதியானதும் அல்ல. இரு கட்சிகள் மாத்திரமே மீண்டும் மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே இவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன. எனவே இன்று (நேற்று) நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பல விடயங்களில் இனக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கமைய ஜனநாயத்தன்மையுடையதும் முற்போக்கானதுமான விகிதாசார பிரிதிநித்துவமுறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின் புதிய முறைமையும் இதனைப் போன்று முற்போக்கானதாகக் காணப்பட வேண்டும். மக்களின் விருத்திற்கு ஏற்ற தெரிவு, சகல வாக்குகளுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் கால தாமதமாகிக் கொண்டிருப்பதால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும்.

விகிதாச முறைமைக்கமைய தெரிவு செய்யப்படும் பாராளுமன்றம் பலவீனமானதாகக் காணப்பட்டால், அந்த பலவீனமான பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கே அதிக அதிகாரங்கள் உடைய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே விகிதாசார தேர்தல் முறைமையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின் நிச்சயமாக நிறைவேற்றதிகார முறைமையும் நீக்கப்பட வேண்டும். 

அதேபோன்று உள்ளுராட்சி, மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் ஆகிய மூன்றுக்கும் ஒரே சமமான தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும். இவை மூன்றுக்கும் வெவ்வேறு தேர்தல் முறைமைகள் காணப்படகூடாது என்பதை இதன்போது தெரிவித்தோம். பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இந்த நிலைப்பாடுகளை அறிவிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

மனோ கணேஷன் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதன் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து இது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. அதற்கமைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இனக்கப்பாட்டை எட்டியுள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நாம் எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

தற்போது காணப்படுகின்ற விகிதாசார முறைமை மிகவும் முற்போக்கான முறைமையாகும். இதனை விட பொறுத்தமான தேர்தல் முறையொன்று இதுவரையில் இனங்காணப்படவில்லை.

எனவே இந்த முறைமையை மாற்ற வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கூறுவோம். மாறாக இந்த தேர்தல் முறைமை மாற்றப்படுமாயின், இதற்குள் அரசியல் கட்சிகளுக்கும், ஏனைய சிறு கட்சிகளுக்கும் காணப்படும் பிரதிநிதித்துவம் பாராளுமன்றமானாலும், மாகாண சபையானாலும், உள்ளுராட்சி சபையானாலும் சகலவற்றிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதில் காணப்படும் சிறந்த விடயங்களையும் உள்ளடக்கியதாகவே புதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் இன்று (நேற்று) கலந்துரையாடப்பட்டது என்றார்.

நிசாம் காரியப்பர் தெரிவிக்கையில், விகிதாசார தேர்தல் முறைமையில் சிறுபான்மை கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்தவொரு தேர்தல் முறைமையையும் எம்மால் அனுமதிக்க முடியாது. 

காரணம் விகிதாசார தேர்தல் முறைமையிலேயே சிறுபான்மை கட்சிகளுக்கு ஜனநாயக முறையில் ஓரளவுக்கேனும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடியதாகவுள்ளது. அதனை இழப்பதற்கு நாம் தயாராக இல்லை. அந்த அடிப்படையில் எமது ஆரம்பகட்ட பேச்சுவாத்தையை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment