திஸ்ஸமகாராமய பகுதியில் சீன இராணுவமா? - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

திஸ்ஸமகாராமய பகுதியில் சீன இராணுவமா?

(எம்.மனோசித்ரா)

திஸ்ஸமகாராமய வாவி அபிவிருத்தி திட்டம் சீன - இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ்வாறிருக்கையில் குறித்த வாவி தூய்மைப்படுத்தும் பணிகளில் சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த ஆடை அணிந்த சீனப் பிரஜைகள் சிலர் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

எனினும் இலங்கை குளங்களை சீனா அபிவிருத்தி செய்வது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை நாம் அறியோம். எவ்வாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பது எமக்கு தெளிவாக தெரியாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், 'குளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை சீனா முன்னெடுத்து வருகிறது. இவற்றிலுள்ள மண் முதலானவற்றை குறித்த நிறுவனம் இலவசமாக அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையா? ' என்று கேட்ட போது இது பற்றி தனக்கு தெரியாது என்று அமைச்சர் பதிலளித்தார்.
எவ்வாறிருப்பினும் அரச நிதி ஒத்துகீடு இன்றி தனியார் துறையின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், திஸ்ஸமகாராமய வாவியின் மணல் மற்றும் ஏனைய கழிவுகளை அகற்றி அதன் நீரை தேக்கி வைத்திருக்கும் திறனை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பமான தினத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு புகைப்படத்தில் சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த உடையுடன் நபரொருவர் காணப்படுகின்றார்.

இந்நிலையில் இதன் உண்மை நிலைவரம் தொடர்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்னவிடம் வினவிய போது, இது குறித்து உரிய தரப்பினரிடம் மேலதிக தவல்களைப் பெற்று உறுதிப்படுத்துவதாகக் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment