டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும், பி.சி.ஆர் செய்வதற்காக ஒரு நாளைக்கு 72 மில்லியன் செலவாகின்றது - அமைச்சர் சுதர்ஷினி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும், பி.சி.ஆர் செய்வதற்காக ஒரு நாளைக்கு 72 மில்லியன் செலவாகின்றது - அமைச்சர் சுதர்ஷினி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

உலகளவில் பரவிக் கொண்டுள்ள வைரஸ்கள் இந்திய வைரஸான டெல்டா வைரஸுக்கு மாற்றமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சபையில் தெரிவித்தார்.

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் வைரஸ் பரவல் இலங்கைக்கு மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றல்ல, இது உலகளாவிய வைரஸ் பரவலாகும். ஆகவே ஏனைய நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை நாமும் எதிர்கொண்டு வருகின்றோம். சகல துறைகளிலும் நாம் பொருளாதார ரீதியில் நெருக்கப்பட்டுள்ளோம்.

ஏற்றுமதி மற்றும் தேசிய உற்பத்திகள் மூலமாக சகல வருவாயும் தடைப்பட்டுள்ளது. மத்திய அபிவிருத்தி நாடு என்பதாலேயே இந்த நெருக்கடியை நாம் பெரியளவில் எதிர்கொண்டுள்ளோம். அதேபோல் நாடாக இன்று மூன்றால் கொவிட் அலைக்கு முகங்கொடுத்து வருகின்றோம். முதலாம் அலையில் எமக்கு பெரிய தாக்கம் ஏற்படவில்லை.

ஆனால் வைரஸ் தன்மை மாற்றுபட்டு அல்பா என்ற வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். மரணங்களும், தொற்றாளர் எண்ணிக்கையும் 50 வீதத்தால் அதிகரித்துள்ளது. சுகாதார துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளது. எனினும் அரசாங்கமாக நாம் நெருக்கடிகளை சமாளிக்க சுகாதார துறையை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

பி.சி.ஆர் செய்வதற்காக ஒரு நாளைக்கு 72 மில்லியன் செலவாகின்றது. இதுவரை 15 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது. வைரஸ் பரவல் மாறிக் கொண்டுள்ளது. ஆகவே இன்று நாளை முடிவுக்கு வந்துவிடும் என கூற முடியாது. 

இபோதுள்ள வைரஸ் இந்திய வைரசுக்கு மாற்றமடைகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுக்கின்றது. எனவே இதனால் தாக்கம் அதிகமாகும். எனவே தொடர்ச்சியாக நாம் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது.

நாட்டிற்கு இப்போது அதிகளவிலான ஒச்சிசன் தேவைப்படுகின்றது, எனவே மேலதிகமாக ஒச்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் அவசியமான மருந்துகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். நாட்டில் 70 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டும். 

ஆனால் பணக்கார நாடுகள் தமக்கான தடுப்பூசிகளை மேலதிகமாக பெற்று களஞ்சியப்படுத்துவதால் எம்மை போன்ற நாடுகளுக்கு பூரணமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

இந்த நிலை தொடருமானால் இப்போதைக்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. எவ்வாறு இருப்பினும் கொவிட் பரவலை வெற்றி கொள்ள தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும். மாறுபட்டு வரும் வைரஸ்களை கட்டுப்படுத்தும் விதமான தடுப்பூசிகளை நாம் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment