ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இதுவரை காலமும் ஓட்டமாவடி பதிவாளர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பிறப்பு இறப்பு பதிவுகளை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவருமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் பிரதேச முஸ்லிம்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் இந்நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுவிடயமாக பிரதமர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பதிவாளர் நாயகம் ஆகியோருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் மீதான சமீபத்திய நிருவாகப் பயங்கரவாதத்துக்கு ஒரு எடுத்துக் காட்டாக மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு அமைந்துள்ளது.
அரசாங்க அதிபரினால் கடந்த 31.05.2021 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஓட்டமாவடி பதிவாளர் பிரிவினால் கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிறப்பு இறப்பு பதிவாளர் கடமைகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பதிவாளர் பிரிவின் கீழ் மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இது அரசாங்க அதிபரின் பக்கச் சார்பான செயற்பாட்டை நிரூபித்திருக்கின்றனது
மேற்படி பிறப்பு இறப்பு நிகழும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை நில அளவையின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நிலையில் இருக்கின்ற அதேவேளை ஓட்டமாவடி பிரதேச செயலக பதிவாளர் அலுவலகமே இதுவரை பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது.
இதனடிப்படையில் ஐந்து பதிவாளர்கள் கடந்த 48 வருட காலமாக பிறப்பு மற்றும் இறப்பு ஆவணங்களைப் பெற்று பதிவு செய்து வந்துள்ளனர்.
ஐ. முஸ்தபாலெப்பை 1973 எஸ்.எல். முஹம்மது ஹனீபா 1999 எம்.ஏ. அப்துல் ஸமது 2000 எஸ்.கே. அஸ்ரப் 2001 என்.எல். இல்யாஸ் 2001 ஆகிய பதிவாளர்கள் பிறப்பு இறப்பு பதிவுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறிருக்கையில் அரசாங்க அதிபரின் உத்தரவுக்கமைய வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் இனிமேல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு இறப்பு பதிவுகள் யாவும் ஓட்டமாவடி பிரதேச செயலக பதிவாளர் பிரிவினால் மேற்கொள்ள முடியாதென்றும் அந்நடவடிக்கைகள் இனிமேல் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள பதிவாளரினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபரின் இவ்வாறான இனவாத ரீதியான செயற்பாடுகள் சமூகங்களிடையே முறுகல் நிலைமைகளை ஏற்படுத்த தூண்டுகோலாக அமைந்துவிடும்.
எனவே அரசாங்க அதிபர் இவ்வாறான பக்கச்சார்பான நிருவாக நடைமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட சனத் தொகையில் முஸ்லிம் மக்கள் 28 வீதம் உள்ளனர்.
இம்மக்கள் மீதான நிருவாகப் பயங்கரவாதம் அன்று முதல் இன்றுவரை பல்வேறு வடிவங்களில் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.
இதனால் நிருவாகம் காணி மற்றும் ஏனைய வளப்பங்கீடுகளில் மிகவும் மோசமான நிலையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளனர்.
2700 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு இனவிகிதாசாரப்படி 700 சதுர கிலோ மீற்றர்கள் கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் வெறும் 38 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள்ளேதான் முஸ்லிம்கள் முடக்கப்பட்டுள்ளார்கள்.
அரச நிருவாகத்தைப் பயன்படுத்தி இவ்வாறான திட்டமிட்ட முஸ்லிம்கள் மீதான இனவாத புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதுள்ள ஆளும் தரப்பு அரசியல்வாதிகளில் இருவர் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை ஊக்குவித்து அரச நிருவாகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறிய முடிகின்றது.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக செயற்பட்டு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் மீதான இனவாத புறக்கணிப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment