பயணத்தடை, சுகாதார நடைமுறை மீறல் சமூகத்திற்கு ஆபத்து : சாய்ந்தமருது பிரதேசத்தில் நடப்பது என்ன? - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

பயணத்தடை, சுகாதார நடைமுறை மீறல் சமூகத்திற்கு ஆபத்து : சாய்ந்தமருது பிரதேசத்தில் நடப்பது என்ன?

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

நாடளாவிய ரீதியில் பயணத் தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாகக் காணப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும், சிலர் சுகாதார நடைமுறைகளையும் மீறிச் செயற்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாக கொரேனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், பயணக் கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வரும் சூழலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றும் (1) இன்றும் (2) அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதைக் காண முடிகின்றது.

கல்முனை நகர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பயணத் தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும், சாய்ந்தமருது போன்ற புறநகர்ப்பகுதிகளில் பயணத் தடையினை மீறும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதை காண முடிகின்றது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் பயணத் தடைகளை மீறுவோருக்கெதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் அதனையும் மீறும் வகையில் சிலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமையுமென சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இது தவிர, அம்பாரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்தி பிரதேச மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்தந்த பிரதேச கொவிட்19 தடுப்புச் செயலணிக்குழு முன்னெடுத்து வருகின்றன.

இதனைவிட மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறி, மீன் போன்ற பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் வியாபாரிகளூடாக விற்பனை செய்யும் நிலையில் மீன், இறைச்சி விநியோகத்திற்காக அனுமதிகள் வழங்குவதற்கு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளன.

இருந்த போதிலும், எந்தச் செயலணி உருவாக்கப்பட்ட போதிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதுடன், பயணத் தடையினை மீறுவோருகெதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமை தொடர்பில் பொலிஸ் தரப்பு தகவலினூடாக அறிய முடிகின்றது.

மேலும், சாய்ந்தமருது பகுதியில் நேற்றும் இன்றும் அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த வேறெந்த தேவைகளுக்காகவும் வீதிகளில் வாகனங்களில் பயணித்தல், இளைஞர்கள் குழுக்களாகச் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வீதிகளில் வீணாக சுற்றித்திரிதல், மீன் பிடிப்பவர்களைத் தவிர ஏனையோர் கடற்கரைகளில் அனாவசியமாகக் கூடியிருத்தல், அத்தியாவசியப் பொருட்களுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகமானோர் கூடியிருத்தல், கொரோனா சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வீதிகள் மற்றும் மைதானங்களில் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகள் தொடர்கதையாகவேயுள்ளன என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.

No comments:

Post a Comment