ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் பிரவீன் ஜயவிக்ரம பெயரிடப்பட்டுள்ளார் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் பிரவீன் ஜயவிக்ரம பெயரிடப்பட்டுள்ளார்

சர்வதேச கிரிக்கெட் சபையின், மே மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில், இலங்கை டெஸ்ட் அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம பெயரிடப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மாதாந்தம் சிறப்பாக பிரகாசிக்கும் வீரர்களை கௌரவப்படுத்தும் நோக்கில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாதத்துக்கான சிறந்த வீரரை அறிவித்து வருகின்றது.

அந்த வரிசையில், கடந்த மாதம் (மே) சர்வதேச போட்டிகளில் பிரகாசித்த மூன்று வீரர்களை தெரிவுசெய்து, அதிலிருந்து ஒரு வீரரை வாக்கெடுப்பின் மூலம் மாதத்துக்கான சிறந்த வீரராக அறிவிக்கும்.

அதன்படி, கடந்த மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தை பெற்றிருந்த இலங்கை அணியின் பிரவீன் ஜயவிக்ரம மே மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பிரவீன் ஜயவிக்ரம அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இலங்கை அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். 

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக் கொண்டார்.

இந்தப்பட்டியலில் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு அடுத்தப்படியாக, பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் முஷ்பிகூர் ரஹீம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கை அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். 

அதிலும், முதன்முறையாக இலங்கை அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற காரணமாக இருந்த இவர், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 125 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சிறப்பாட்டக்காரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

மே மாதத்துக்கான சிறந்த வீரருக்காக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் சிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

குறித்த மூன்று வீரர்களில், ஒரு வீரரை வாக்கெடுப்பின் அடிப்படையில், மே மாதத்துக்கான சிறந்த வீரராக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment