தேசிய வலுசக்தி வளத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சி : மக்களை ஏமாற்றி தேசிய சொத்துக்களை தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு விற்கவே முயற்சி - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

தேசிய வலுசக்தி வளத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சி : மக்களை ஏமாற்றி தேசிய சொத்துக்களை தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு விற்கவே முயற்சி - விஜித ஹேரத்

(எம்.மனோசித்ரா)

தேசிய வலுசக்தி வளத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. வலுசக்தி என்பது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். அதற்கமைய நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய வலுசக்தி ஏதேனுமொரு வகையில் தனியார் மயப்படுத்தப்பட்டால் அது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எரிபொருள் ஏற்றுமதி, இறக்குமதி, சுத்திகரிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு (ஐ.ஓ.சி.) வழங்கியுள்ள அனுமதிபத்திரம் 2023 ஆம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. எனவே அந்நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதி பத்திரத்தை வழங்குவதற்காகவே பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டத்தில் மீண்டும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.

இது குறித்து ஏப்ரல் 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்தில் ' இலங்கையில் எரிபொருள் ஏற்றுமதி, இறக்குமதி, சுத்தீகரிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பொறுத்தமான எந்தவொரு நிறுவனத்திற்கும் அதற்கான அனுமதியை வழங்குவதற்கான அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் வசமாக்கப்படும்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக எரிசக்தி வளம் தொடர்பான அதிகாரம் ஒரு தனிநபர் வசப்படுத்தப்படுகிறது.

பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள அதிகாரங்கள், தற்போது அந்த சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தினால் தனியார் வசப்படுத்தப்படவுள்ளன. இதுவே அரசாங்கத்தின் உள்நோக்கமாகும். அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் அனைத்து அதிகாரங்களும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமாகும்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கிடையில் தற்போது சிலவும் அரசியல் போராட்டத்திற்கு இலங்கை இரையாகிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சட்ட திருத்தத்தின் ஊடாக சீன துறைமுகத்தில் காணப்படுகின்ற எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கும் வழங்கி, ஏனைய செயற்பாடுகளை சீன நிறுவனத்திற்கு வழங்கவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் பெற்றோலியத்துறையில் அரசாங்கத்தால் செய்யப்பட்ட மோசடிகள் காரணமாக இலங்கையின் பிரதான இரு அரச வங்கிகளுக்கும் 3,300 மில்லியன் டொலர் கடன்சுமை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இலாபம் ஈட்டும் நிறுவனமாகக் காணப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆட்சியாளர்களால் நஷ்டமையும் நிறுவனமாக மாற்றமடைந்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கும் வழங்கியதைப் போன்று எதிர்காலத்தில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தையும் தனியார் துறைக்கு அல்லது வேறொரு நாட்டுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். மக்களை ஏமாற்றி தேசிய சொத்துக்களை தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு விற்கும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

வலுசக்தி என்பது நாட்டின் பாதுகாப்பாகும். தேசப்பற்றாளர்கள் என்ற போர்வையுடன் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர் உதய கம்மன்பில தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்றுக் கொண்டிருக்கிறார். நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய வலுசக்தி ஏதேனுமொரு வகையில் தனியார் மயப்படுத்தப்பட்டால் அது தேசிய பாதுகாப்பிற்க பாரிய அச்சுறுத்தலாக அமையும். அவ்வாறான நிலை ஏற்பட மக்கள் இடமளிக்கக் கூடாது என்றார்.’’

No comments:

Post a Comment