ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியதிகாரத்தில் இருந்து ஒதுங்குங்கள் - சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியதிகாரத்தில் இருந்து ஒதுங்குங்கள் - சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்

அரசாங்கத்தால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சியிடம் ஒப்படைத்து விட்டு, ஆட்சியதிகாரத்தில் இருந்து ஒதுங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த தேர்தல் காலங்களில் மஹிந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும், ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு மாத்திரம்தான் என்பது தற்போதைய செயற்பாடுகள் ஊடாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

மேலும் அவர்களை நம்பி வாக்களித்த மக்கள், நடு வீதியில் நிற்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பெற்றோலியத்தின் விலையை குறைப்பதற்கு மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது எதிர்காலத்தில் பெற்றோலியத்திற்கு விலை ஏறும்போது, மக்களுக்கு சமமான சேவையை வழங்குவதற்கே இந்த பணத்தை சேமிக்கின்றோம் என்றார்கள்.

ஆனால் தற்போது, அந்த சேமித்த பணத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இவ்விடயம் தொடர்பாக அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களோ அல்லது ஜனாதிபதியோ பதில் கூற முடியாமல் தடுமாறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

மேலும் பெற்றோலிய விலையேற்றம் தொடர்பாக ஆளும் கட்சிக்குள் ஜனாதிபதி ஒரு கருத்தையும் பெற்றோலிய அமைச்சர் ஒரு கருத்தையும் அமைச்சரவைக்குள்ளே ஒரு கூட்டு முடிவை கூற முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள்.

குறித்த விடயத்துக்கு சிறு பிள்ளைகளுக்கு கதை கூறுவது போன்று பிரதமர் மற்றும் ஏனையவர்கள் அந்த விடயத்தினை மழுங்கடிக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment