இலங்கையில் மே மாதத்தில் மாத்திரம் 78218 தொற்றாளர்கள் : இன்று 2845 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

இலங்கையில் மே மாதத்தில் மாத்திரம் 78218 தொற்றாளர்கள் : இன்று 2845 பேருக்கு கொரோனா

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கடந்த ஏப்ரல் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது. அதற்கமைய கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தில் 78218 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதற்கமைய கொழும்பில் 14904 தொற்றாளர்களும், கம்பஹாவில் 13276 தொற்றாளர்களும், களுத்துறையில் 9796 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்.

காலி, குருணாகல், கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தறை, அநுராதபுரம், மாத்தளை, கேகாலை, யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 1000 - 5000 இடைப்பட்ட தொற்றாளர்களும், அம்பாறை, மொனராகலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் 800 - 1000 இடைப்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை 2845 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. அதற்கமைய நாட்டில் தொற்று உறுதிப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 89209 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 91108 பேர் புத்தாண்டின் பின்னர் ஒருவான கொத்தணியில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர்.

இன்று செவ்வாய்கிழமை காலை 1915 தொற்றாளர்கள் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இதுவரையில் ஒரு இலட்சத்து 51740 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதோடு, 33498 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 56 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3622 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் தொற்றால் 24 வயது யுவதி பலி
கொவிட் தொற்றின் காரணமாக 24 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். ரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி கொவிட் நிமோனியாவால் மே மாதம் 27 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை 43 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவற்றில் 4 மரணங்கள் திங்களன்று பதிவானவையாகும்.

சீதுவ, ஹாலிஎல, நிக்கதலுபொத்த, குருநாகல், செவனகல, யன்தம்பராவ, கிரியுள்ள, காரைநகர், புத்தளம், காத்தான்குடி, வத்தளை, புளுத்தோட்டை, கலஹெட்டிஹேன, அத்துருகிரிய, கலவான, உடகரவிட்ட, கஹவத்தை, பெல்மடுவ மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 40 - 85 வயதுக்கு இடைப்பட்ட 20 ஆண்களும், கடுவலை, வாரியபொல, மாவத்தகம, கடவத்தை, கலேவெல, உஹூமிய, குருணாகல், மெல்சிறிபுர, இரத்தோட்டை, பாணந்துரை, பனாத்தரகம, கொபைகன, பெல்மடுல்லை, வவுனியா, கேகாலை, மினுவாங்கொடை, கலஹெட்டிஹேன, தலங்கமுவ, உடவளவை, குறுவிட்ட, கஹவத்தை மற்றும் கிரியல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 - 95 வயதுக்கு இடைப்பட்ட 23 பெண்களும் இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1484 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments:

Post a Comment